தமிழ் சமுதாயம் பாரிய பின்னடைவு காண்பதற்கும், சொல்லொண்ணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதற்கும் பிரதான காரணம் தமிழ் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் விட்டுக் கொடுக்காத தன்மையும் காட்டிக் கொடுப்புக்களுமேயாகும்.
இதன் காரணமாகவே எந்தவொரு இலக்கையோ, நோக்கத்தையோ அடைய முடியாதுள்ளது. இது இன்று நேற்றன்று, தொன்று தொட்டு தொடர்ந்து வருவதும் தெரிந்த விடயமாகும்.
குறைந்தபட்சம் தமிழ் மக்கள் கண்முன்னே எதிர்நோக்கிய பேரவலத்தின் பின்னராவது தமிழ் சமூகம் திருந்தியிருக்குமா? என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை என்பதைப் போன்றே அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அமைந்துள்ளன.
வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாகாண சபையின் அமைச்சர்களை நியமிப்பதில் நீடித்த இழுபறியைத் தொடர்ந்து ஒருவாறாக வெள்ளிக்கிழமை இந்தப் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
வட மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 7ம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதனையடுத்து கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட மாகாண சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சி.வி.கே.சிவஞானமும், பிரதி தவிசாளராக அன்ரன் ஜெயநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சராக இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வைத்திய கலாநிதி பி.சத்தியலிங்கம், கல்வி, கலாசார அமைச்சராக இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தி.குருகுலராஜா, விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சேர்ந்த பி.ஐங்கரநேசன், மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக ரெலோவைச் சேர்ந்த டெனீஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் தெரிவு குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீண்ட விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.
அதன்படி பலருக்குத் தகைமை இருந்தும் சிலருக்கே அமைச்சுப் பதவிகள் கொடுக்கக் கூடியதாக இருந்தது.
அப்படியிருந்தும் பிரதேச பிரதிநிதித்துவம், கட்சி அடிப்படை, நிர்வாகப் பொறுப்புக்களின் அந்நியோன்யம், மக்களின் ஆதரவு என்பன கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 14 உறுப்பினர்களையும், ஈ.பி.ஆர்.எல்.எப். 6 உறுப்பினர்களையும், ரெலோ 5 உறுப்பினர்களையும், புளொட் இரண்டு உறுப்பினர்களையும், ரி.யு.எல்.எப். 1 உறுப்பினரையும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 1 உறுப்பினரையும் கொண்டுள்ள அதேவேளை, பொதுவேட்பாளர் உட்பட 30 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் சிலர் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.ஆர்.எல்.எப். இல் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களும் புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் ரெலோவில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களுமாக ஒன்பது உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரிய வருகிறது.
வட மாகாண சபை அமைச்சரவையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு அமைச்சுப் பதவி வழங்கவில்லை. மாறாக தனிப்பட்ட நபர் ஒருவருக்கே வழங்கிவிட்டு அதனை கட்சிக்கு வழங்கியதாக கூறுவது தவறான செயற்பாடாகும் என அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
எவ்வாறிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ளமையையே இது வெளிச்சம் போட்டுக் காட்டும் விடயமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படும் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலுமே தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கி அவர்களின் வரலாறு காணாத வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.
இந்நிலையில் கூட்டமைப்புக்குள் குத்து வெட்டுக்கள் உருவாகுமானாலோ, கருத்து வேற்றுமைகள் மேலோங்குமானாலோ அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் பேரினவாதிகளுக்கும் கடும் போக்காளர்களுக்கும் கிடைத்த சிறந்த தீனியாகவே இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மறுபுறம் இவ்வாறான கருத்து மோதல்களும் சச்சரவுகளும் வட மாகாண சபையின் நோக்கத்தையே தவிடுபொடியாக்கிவிடும் என்பதையும் மறந்து போகக் கூடாது.
குறைந்தபட்சம் மாகாண சபை தனது செயற்பாடுகளை தங்கு தடையின்றி ஆரம்பிப்பதற்கேனும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது அத்தியாவசியமாகும்.
மாறாக குழப்பத்திலேயே ஆரம்பிக்குமானால் அதன் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைவதற்கு வழிபிறக்காமலும் போகலாம். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.
வட மாகாண சபை சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் உருவாகியுள்ளது. அதன் சீரான இயக்கத்திற்கு அதன் உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குவது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.
அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனைவிடுத்து தங்களுக்குள்ளேயே முட்டி மோதி, அதன் செயற்பாட்டிற்கு அவர்களே தடைக்கல்லாக இருப்பார்களேயானால் அது தென்னிலங்கை சக்திகளின் எதிர்பார்ப்புக்கு களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்ற அவப்பெயரையே அவர்களுக்குத் தேடிக் கொடுப்பதாக அமையும்.
வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த வெற்றியைக் கண்டு உலகமே வியந்து நிற்கும் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்த கதையாக எவரும் செயற்படுவார்களேயானால் அதனை தமிழ் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்க மாட்டாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வட மாகாண சபையை நிர்வகிப்பது மாத்திரமன்றி அதன் சீரான செயற்பாட்டை உறுதி செய்வதும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முன்னால் எழுந்துள்ள பாரிய சவாலாகும்.
அவர் தனது அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தி எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றார் என்பதை சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கட்டத்தில் துயரங்களின் விளிம்பிற்கே சென்ற தமிழ் மக்களின் மீட்சிக்கேனும் நம்பி வாக்களித்த அந்த மக்களைக் கைவிடாது, மாகாண சபை உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதை மிகுந்த மனிதாபிமானத்துடன் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.