இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதியை அழைக்க இருந்தனர் அது எமது கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்ட பின்னரே முதலமைச்சர் அலரி மாளிகை சென்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.
அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தோம். ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யாமல் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் வேணுமென்றால் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஜனாதிபதியுடன் நல்லெண்ண சந்திப்பை மேற்கொள்ளுங்கள் என கூறி இருந்தோம்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம் செய்வது என்பது அவரது காலடியில் போய் வீழ்வதற்கு ஒப்பானது.
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திறமைக்கு இவ்வளவு வாக்குகளும் கிடைக்கவில்லை அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளே 75 வீதமானவை மிகுதி 25 வீதமான வாக்குகளே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல உள்ளக சுயநிர்ணயம் அதாவது வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான பூரண சுயாட்சி முறைக்கும்.
இலங்கை அரசின் மீதான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அதற்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்பவற்றுக்காகவே எமக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள்.
எங்களுக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் அறவே நம்பிக்கை இல்லை ஆனாலும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் மாகாண சபையை ஏற்று கொண்டோம்.
தெரிவு செய்யப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் மாகாண சபையில் இருந்து கொண்டு மக்கள் தந்த ஆணையை ஏற்று நடப்போம்.
போரிலே கொல்லப்பட்ட மக்கள், மரணித்த மாவீரர்கள், கொல்லப்பட்ட தலைவர்கள், மரணித்த தமிழ் தேசிய வீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணிலே அஞ்சலி செலுத்திவிட்டு தான் முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டேன்.
என்னுடன் மன்னார் ஆயரோ, மன்னார் ஆயருடன் பேச்சு நடாத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனோ பேச்சுக்களை நடத்த வில்லை அதனால் தான் நான் இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.