இலங்கையின் மனித உரிமைகளை கட்டுப்படுத்த பொதுநலவாயம் புதிய ஏற்பாடு ஒன்றுக்கு இணங்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

amnesty-international-logoபொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகள், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக குழுக்கூட்டம் நேற்றும் இன்றும் லண்டனில் நடைபெறுகிறது.

இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், இலங்கையில் மற்றும் பொதுநலவாய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு இணக்கவேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இலங்கையில், சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், சர்வதேச நிகழ்வுகளின் போதும் கூட மனித உரிமை பாதுகாவலர்கள் தாக்கப்படுகின்ற அச்சுறுத்தப்படுகின்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்று மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் நிகழ்ச்சி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கோட் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் போது அங்கு பிரசன்னமாகியிருக்கும் சர்வதேச மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு சென்று திரும்பிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை சர்வதிகார போக்கை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளதாக பொலிட்ரஸ்கோட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமையை இலங்கைக்கு வழங்கினால் அது பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களை தகர்க்கும் செயலாக அமைந்து விடும் என்றும் ட்ரஸ்கோட் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: