இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள்!

lanka_tamils_protestஇலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபானமையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் அமைப்பான எம் ஆர் ஜி இண்டர் நாஷனல் எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

போர் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் தமது கணவனை இழந்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக பாலியன் வன்செயல்கள் முதல் காணிகள் அபகரிப்பு வரை முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

வடக்கில் காணப்படுகின்ற மிகவும் அதிகமான இராணுவ பிரசன்னமும் இதற்கு ஒரு காரணம் என்று தாம் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார் எம் ஆர் ஜி இண்டர்நாஷனல் அமைப்பின் இயக்குனரான மார்க் லட்டிமர்.

பெருமளவிலான இலங்கை இராணுவத்தின் இருப்பு காரணமாக அந்த பிராந்தியம் பெருமளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பாக தமிழ் பெண்களும், சில இடங்களில் முஸ்லிம் பெண்களும் மிகவும் மோசமான பாதுகாப்பின்மையை எதிகொள்கிறார்கள்” என்று மார்க் லட்டிமர் பிபிசியிடம் கூறினார்.

பல வகையிலான ஆதாரங்களின் மூலமும் வழிமுறைகள் மூலமும் தாம் தமது ஆய்வைச் செய்ததாக அவர் கூறுகிறார்.

சிறுபான்மையின பெண்களை தாங்கள் மன்னார், திருகோணமலை போன்ற இடங்களில் அவதானிப்புக் குழுக்களின் மூலம் நேரடியாகச் செவ்வி கண்டதாகவும், வேறு தகவல்களையும் தாங்கள் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 2012 இல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்குள் மாத்திரம் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான 56 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அனுமானத்தில் அல்லாமல் ஆதாரங்கள் பற்றும் பதிவுகளின் அடிப்படையில் அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாகவும் மார்க் லட்டிமர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்சியாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவங்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்து வந்துள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையிலேயே வருடா வருடம் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதை தாங்கள் கண்டிருப்பதாகவும் அப்படி அதிகரிப்பது வழமைக்கு மாறானதாகும் என்றும் எம் ஆர் ஜி இண்டர்நாஷனல் கூறுகிறது.

இவை குறித்து பாதிக்கப்பட்ட பெணகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தாக்குதல்களில் ஒரு குறித்த போக்கைப் பார்க்கக்கூடியதாக இருந்ததாக மார்க் லட்டிமர் கூறியுள்ளார்.

சில சம்பவங்களில் இலங்கைக்கு உள்ளே வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்களாலும் சிறுபான்மைப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சில வேளைகளில் உள்வீட்டு வன்முறைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

TAGS: