மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகரப் பிரதேசத்திலுள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் மீண்டும் அடையாளம் தெரியாத ஆட்களின் தாக்கப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் தமிழர்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களினால் நேற்றிரவு ஆலயத்தின் கூரை அகற்றப்பட்டதோடு, ஆலயத்தின் முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடியும் கொடிக்கம்பமும் அகற்றப்பட்டு, சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்களால் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவிக்கின்றார்.
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி அரசாங்கத்தினால் புனித பூமியாக அடையாளமிடப்பட்டுள்ள காணிக்குள் இந்த ஆலயம் 20 வருடங்களாக அமைந்துள்ளது.
ஏற்கனவே அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் அரசாங்கத்தின் உத்தரவு காரணமாக அங்கிருந்து வெளியேறிவிட்ட போதிலும் ஆலயத்திற்கு பொருத்தமான காணி இதுவரை வழங்கப்படாத நிலையில் ஆலயம் தொடர்ந்தும் அதே இடத்திலேயே உள்ளது.
பௌத்தர்களின் புனித பூமி பிரதேசத்திலிருந்து இந்த ஆலயமும் அகற்றப்பட வேண்டும் என குறித்த விகாரையின் பிரதம குருவினாலும் அங்குள்ள பௌத்தர்களினாலும் ஏற்கனவே தங்களுக்கு அழுத்தங்கள் இருப்பதாக ஆலய நிர்வாகம் கூறுகின்றது.
ஏற்கனவே ஒரிரு தடவைகள் தாக்கப்பட்ட பத்திரகாளியம்மன் ஆலயத்தின் அம்மன் சிலை சென்ற மாதம் அடையாளம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஆலயத்தின் பாதுகாப்புக்காக அங்கு வாழ்ந்த தமிழர்கள் குழுக்களாக தங்கியிருப்பது வழக்கம்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக எவரும் தங்கியிருக்காத சந்தர்பத்திலேயே மீண்டும் அது தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆலயத்தின் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யப்படுகின்ற போதெல்லாம் விசாரணைகள் மட்டும் தான் நடைபெறுகின்றதே தவிர அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காண முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கூறுகின்றார். -BBC