எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்

elilanAஇலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து,பின்னர் தகவல்கள் ஏதும் தெரியாதுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேர் தொடர்பான விசாரணைகள் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களைப் பரிசீலனை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவர்கள் தொடர்பான சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றிருப்பதனால், அதுகுறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்குகள் இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதார்கள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், இந்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, டிசம்பர் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இந்த விசாரணகைள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் எம்.கணேசராஜா, இந்த விசாரணைகள் டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது நீதிமன்றத்தில் அரச தரப்பபில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இந்த விசாரணைகளின்போது இராணுவத்தினர் சார்பில் ஆஜராகுவதற்கென, சட்டமா அதிபர் விசேடமாக ஓரு சட்டத்தரணியை அனுப்பி வைக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

TAGS: