இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் இராணுவத்தினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு நேரடியாகச் சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர் ஃபர்கல் கீன் நேற்று முன்தினம் வெளியிட்ட தொலைக்காட்சி செய்திப் பெட்டகத்தில் பேசிய முன்னாள் பெண் போராளி ஒருவர் தான் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் இராணுவத்தினரிடம் சிக்கினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படலாம் என்று அஞ்சிக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதுகுறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, பிபிசியின் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறினார்.
‘பிபிசியில் இதற்கு முன்னர் வெளியான செய்தியொன்றில் 75 பேர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறப்பட்டிருந்தது. அப்போதே அதில் உண்மை எதுவும் இல்லை என்று மறுத்திருந்தோம். அதேபோலத் தான் இப்போதும். பிபிசியாகட்டும் வேறு ஊடகங்களாக இருக்கட்டும் துரதிஸ்டவசமாக அனேகமான சந்தர்ப்பங்களில் முகம் காட்டாத பெயர் இல்லாத நபர்களைத் தான் காட்டுகிறார்கள். முகம் இல்லாத, பெயர் இல்லாத இப்படியான நபர்கள் கூறுகின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்’ என்றார் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.
வடக்கில் கடந்த 4 ஆண்டுகளில் இராணுவத்தினரால் நடந்ததாகக் கூறப்படும் 11 சம்பவங்கள் தொடர்பில் இராணுவ சட்டத்தின் கீழே சட்ட நடிவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனைகளும் அளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, ஹெய்ட்டியில் ஐநா அமைதிகாக்கும் படையினராக செயற்படும் இலங்கை இராணுவத்தின் சிப்பாய் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அவர் பற்றிய விசாரணைகளை தமது இராணுவ விசாரணை மன்றமொன்று ஆரம்பித்துள்ளதாகவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
BBC reporters போன்று தமிழ்நாடு TV reporters தரம் உயர்வார்களா ?