வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் நடந்தது.
முன்னதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவரும் இணைந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து சபையின் முதல் அமர்வு துவங்கியபோது, யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கைக்கு முறையாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிகழ்வின்போது பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் தற்போது உள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஐந்தில் ஒன்று என்கிற எண்ணிக்கையில் இருக்கும் ராணுவத்தினரை படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
வடமாகாணத்தில் இருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பதாக கூறிய விக்னேஸ்வரன் தாம் அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
வடமாகாண தமிழ்மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படும் வகையில் காவல்துறையில் தமிழர்கள் அதிகம் சேர்க்கப்படுவார்கள் என்றும், மீள்குடியேற்றத்தில் மேலதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதிலும் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
450 மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திலேயே வடமாகாண சபை அமர்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மாடிப்பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் நடந்துவருகின்றன. -BBC