தெற்கில் தமிழர்கள் வாழ முடியாத சூழ்நிலையை விக்னேஸ்வரன் உருவாக்குகிறார்: தேசப்பற்றுள்ள இயக்கம்

vasantha_bandara_001வடக்கில் சிங்கள மக்களை குடியமர்த்த இடமளிக்கப் போவதில்லையென்ற விக்கினேஸ்வரனின் இனவாதக் கருத்தானது கொழும்பிலும் தெற்கிலும் தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கும் இடமளிக்கப்படமாட்டாதென்ற பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

விக்கினேஸ்வரன் இக் கருத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும் இது தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பதையும் கண்டித்து அவ்வியக்கம் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் நிறைவேற்று குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற வழமையான கோரிக்கையை மீறியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலாவது கன்னி அமர்வில் உச்சக்கட்டமாக தமிழ் இனவாத நஞ்சை கக்கியுள்ளார்.

அதுதான் வட மாகாணத்தில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ குடியமர்த்தவோ இடமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் கொழும்பிலும், தென்பகுதியிலும் தமிழ் மக்களை குடியேற்ற இடமளிக்கப் போவதில்லையென்ற எதிர்ப்பு இங்கு உருவாகும். அதற்கான பொறுப்பை விக்னேஸ்வரனே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் இனவாதிகளைப் போன்று சிங்கள இனவாதக் கும்பல்களும் இயங்குகின்றன.

எனவே விக்னேஸ்வரனின் கருத்தை மையமாக வைத்து தமிழர்களுக்கு எதிராக இனவாத மோதலை கொழும்பில் ஏற்படுத்தினால் என்ன நடக்கும்? அவ்வாறானதொரு நிலைமை உருவானால் அதற்கான முழுப்பொறுப்பையும் விக்னேஸ்வரனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்களை குடியேற்ற இடமளிக்க முடியாது என எப்படி கூற முடியும். தற்போது நாவற்குழியில் தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதில் வீடுகளை கேட்டு விண்ணப்பங்களை பொதுமக்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைப்பார்கள். அவ் விண்ணப்பங்களை தமிழர்களது சிங்களவர்களது முஸ்லிம்களது என இன ரீதியாக பிரித்து ஆராயப்படமாட்டாது.

எனவே இனவாதத்தை இன மோதல்களை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிடலாகாது.

எனவே தனது கருத்தை விக்கினேஸ்வரன் வாபஸ் பெற வேண்டும். இல்லா விட்டால் அதனால் ஏற்படும் அனைத்து இனவாத மோதல்களுக்கும் அவரே பொறுப்பாளியாவார்.

TAGS: