கணவர் தொடர்பில் நீதிமன்றம் நீதியை வழங்கும்!- அனந்தி சசிதரன் நம்பிக்கை தெரிவிப்பு

Anandi-Sasidaranதனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தனக்கு நீதியை வழங்கும் என நம்புவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தின் போது தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளருமான எஸ். எழிலன் படையினரிடம் சரணடைந்தமைக்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதுடன் அதற்கான பல சாட்சியங்களை சேகரித்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் எனக்கு நீதி வேண்டும். அவருடன் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

போரில் காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பில் பலர் இதே போன்ற வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

அதேவேளை அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அடுத்த வாரம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு வருமாறு மாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

TAGS: