அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, சிலாங்கூர் சுல்தான் கட்டளையை விமர்சித்ததால் எழுந்த சர்ச்சை ஓய்வதாக தெரியவில்லை.இப்போது சர்ச்சையிடும் கூட்டத்தில் கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டினும் சேர்ந்துகொண்டிருக்கிறார்.
அந்த சுயேச்சை எம்பி, அரசமைப்பு விவகாரங்கள்மீது சட்டவல்லுனருடன் வாதமிட ஆயத்தமாக இருப்பதாய் மலாய் செய்தித்தாள்களான பெரித்தா ஹரியானும் உத்துசான் மலேசியாவும் அறிவித்துள்ளன.
ஆனால் முதலில், சிலாங்கூர் சுல்தான் கட்டளை குறித்து விமர்சித்ததற்காக அப்துல் அசீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுல்கிப்ளி கூறினார்.ஆகஸ்ட் 3-இல், டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் தொடர்பில் சுல்தான் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்துத்தான் அப்துல் அசீஸ் விமர்சனம் செய்திருந்தார்.
“அவர் எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று வாதமிட நான் தயார். ஆனால், முதலில் அவர் சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சுல்தானின் கட்டளையை அவர் விமர்சனம் செய்திருந்திருந்ததை மரியாதைக்குறைவான செயல் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்”, என்று அவர் கூறியதாக உத்துசான் அறிவித்திருந்தது.
அவர், அப்துல் அசீஸுக்கு ஒரு சவாலையும் விடுத்திருந்தார். யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) விரிவுரையாளர் பணியிலிருந்து விலகி அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராக போட்டியிடத் தயாரா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நிற்க நான் தயார்.
“அவரது தலைவிதி அங்கு தீர்மானிக்கப்படும்.அதன்பின் அவர் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊரான சாபாக் பெர்ணத்துக்குப் புறப்பட்டுச் செல்லலாம்”, என்று சுல்கிப்ளி பீற்றிக்கொண்டார்.
அப்துல் அசீஸ் பதவி விலக வேண்டும் என்று கூறப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த வாரம் செனட்டர் எசாம் முகம்மட் நூரும் இதேபோன்ற சவால் ஒன்றை விடுத்திருந்தார்.
முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரான எசாம், அப்துல் அசீஸ் நடுநிலையானவர் அல்ல என்றும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒரு கல்விக்கழகத்துக்கு ஒரு நூலை எழுதிக்கொடுத்து அதற்காக உரிமத்தொகையையும் அவர் பெற்றுக் கொண்டதற்கு “ஆதாரம்” இருப்பதாகவும் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறியது.
“பெரும் பணத்தை உரிமத்தொகையாக பெற்றுள்ளார். அது எவ்வளவு என்பதை (அப்துல்) அசீஸ் அறிவிக்க வேண்டும்”, என்று எசாம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.