அமெரிக்காவுக்கு இலங்கையின் மனித உரிமை பற்றி பேச அருகதை இல்லை!- கோத்தபாய ராஜபக்ச

kottabaayaaஉலகின் பலம்வாய்ந்த வல்லரசான அமெரிக்கா ஒரு பொலிஸ்காரனைப் போன்று மற்ற நாடுகளின் மீது தன் அதிகாரத்தைப் பிரயோகித்து ஆதாரமற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற போதிலும், அதைவிட மோசமாக குற்றச் செயல்களை தாம் மேற்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

ஏன் இவ்விதம் அமெரிக்கா நடந்துகொள்கிறது என்று ஒரு ஊடகவியலாளர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கேட்ட போது, நாம் எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்விதம் நடந்து கொள்கிறோம் என்று விளக்கம் அளிக்கிறார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட மேலும் பல நாடுகள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நாடுகளின் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக பலியாகினார்கள்.

இந்தக் குற்றச் சாட்டுக்கும் அமெரிக்க அரசாங்கம் எங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் இவ்விதம் செய்கின்றோம் என்று பதிலளிக்கிறது.

இதனை விட வெளிநாட்டுத் தலைவர்களின் கையடக்கத் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்க உளவு படையினர் ஒட்டுக் கேட்டு அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.

ஜேர்மன் நாட்டின் அதிபரின் கையடக்கத் தொலைபேசி உரையாடலையும் அமெரிக்க உளவாளிகள் ஒட்டுக் கேட்டிருப்பது இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்கா இன்று சர்வதேச அரங்கில் ஒதுக்கப்படும் அவல நிலையை எதிர்நோக்கி இருக்கிறது.

இவ்விதம் தான் அமெரிக்கா இலங்கை போன்ற நாடுகளையும் துன்புறுத்துகின்றது என்று அரச ஊடக தலைவர்களை சந்தித்த போது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

இத்தகைய மோசமான அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து சுதந்திர ஊடகவியலாளர்கள் எழுதி அமெரிக்காவின் குறைபாட்டை அந்நாட்டு தலைவர்களுக்கு சுட்டிக் காட்டுவது அவசியம் என்று கூறினார்.

TAGS: