வடக்கில் படைவிலக்கம் நடைமுறைச் சாத்தியமற்றதா?

Sri-Lanka-Armyவடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் வடக்கில் இருந்து படைகளை வெளியேற்றக் கோரும் அழுத்தங்களும் அரசாங்கத்துக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 25ம் திகதி வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு தொடங்கிய போது,  உரை நிகழ்த்திய முதலமைச்சர் விக்னேஸ்வரன், படைவிலக்கத்தை முதன்மையான கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் வடக்கில் இருந்து படைகளை விலக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இது ஒரு முதன்மைப் பிரச்சினையாகவே எழுப்பப்பட்டது.

இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் தனது முதலாவது உரையிலேயே இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

வடக்கில் இருந்து படைகளை விலக்குவதற்கு அரசாங்கம் இதுவரை கூறிவந்த காரணங்களை இன்னொருமுறை முன்வைக்க முடியாத வகையில் சட்டரீதியான தனது வாதத்திற்கமைய வைத்து உரையை தயாரித்திருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.

மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவப் போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாரா குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது.

எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில் இருந்து இராணுவத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக வட மாகாணத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கைகளை அங்கீகரித்துள்ளமை புலனாகிறது.

படிப்படியாக இராணுவ வெளியேற்றம் பற்றி அரசாங்கமும் கூறி வருவது (நடைமுறையில் மாற்றங்களை நாம் காணாது விட்டாலும்) மன மகிழ்வை ஏற்படுத்தியது.

உரிய பேச்சுவார்த்தையின் பின்னர் திடமான திட்டம் ஒன்றை இது சம்பந்தமாக வட மாகாண சபையினராகிய நாங்களும் அரசாங்கமும் தீட்ட வேண்டி வரும்.

அப்பொழுது பாதுகாப்பு பற்றிய சீர்திருத்தங்கள் கருத்தில் எடுபட வேண்டும்.

சர்வதேச ரீதியாக கைது செய்யப்பட்டவர்கள் மேலும் சரணடைந்த போராளிகள் ஆகியோர் எவ்வாறு ஆயுத நீக்கத்திற்கும் இராணுவக் கலைப்புக்கும் சமூக இணைப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றார்களோ அதேபோல் பாதுகாப்பு கோணஞ்சார் சீர்திருத்தங்கள் இராணுவத்தினரைக் குறைத்து பாதுகாப்பு நிறுவனங்களைக் கூடிய தொழிற் திறனுடன் செயற்பட வழி வகுக்கின்றன.

இது சம்பந்தமாக அரசாங்கமானது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் மேற்படி போர் வீரர்களை சேர்“த்துக் கொள்ள முடியுமா என்பது பற்றியும் ஆராயலாம்.

போர் வீரர்கள் இராணுவ வாழ்க்கையில் இருந்து குடிமக்கள் வாழ்க்கைக்கு மாற சர்வதேச உதவிகள் பெறக்கூடுமா என்பதைப் பற்றியும் அரசு ஆராயலாம்.

இராணுவத்தினர் உரியவாறு வாபஸ் பெற்று செல்வதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினது கடமை.

இராணுவத்தினரோ துணை இராணுவத்தினரோ இராணுவத்தை வெளியேறாது தடுக்க நாடகங்கள் இயற்றக்கூடும்.

அவற்றிற்கு எவரும் ஏமாந்து விடக்கூடாது என்று கோருகின்றோம்.

வட மாகாண தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு முரணான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக கூறிவைக்கின்றோம்.

இந்த உரைக்குள் பல முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கியுள்ளன.

முதலாவது வடக்கிலுள்ள படையினரை உடனடியாக முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்பது.

அடுத்தது படிப்படியாக வடக்கிலுள்ள படையினரை வெளியேற்றுவது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள இந்த செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வடக்கில் நிலைகொண்டுள்ள கணிசமானளவு படையினர் விலகி விடுவர்.

ஆனால் அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

ஏற்கனவே படைவிலக்கம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

அதற்கு அரசாங்கம் சில காரணங்களைக் கூறி நியாயப்படுத்தியும் இருந்தது.

வடக்கில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னமும் அவர்களின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் அங்கு நிலைகொண்டிருக்க வேண்டும் என்றது அரசாங்கம்.

அதைவிட நாட்டின் எல்லா இடங்களிலும் படையினர் நிலை கொண்டுள்ளதைப் போலத்தான் வடக்கிலும் நிலைகொண்டுள்ளனர் என்றும் எல்லா மாகாணங்களும் படையினரை வெளியேற்றக் கோரினால் அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்துவது என்று பலமுறை கேள்வி எழுப்பி விட்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இத்தகைய காரணங்களைத் திரும்பவும் முன்வைக்காத வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனதுரையில் அரசாங்கத்துக்கு சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

ஐநா அமைதிப்படைக்கு அதிகளவு படையினரை அனுப்புவது குறித்து ஆராயலாம். போராளிகளை பொது வாழ்வுக்கு கொண்டு வந்தது போன்று படைக்குறைப்புச் செய்து இராணுவத்தினரையும் பொதுவாழ்வுக்கு கொண்டு வரலாம் என்பன போன்ற யோசனைகளை அவர் முன்வைத்துள்ளார்.

படைக்குறைப்பு என்பது காலச்சூழலுக்கேற்ப எல்லா நாடுகளும் மேற்கொள்ளும் ஒன்றுதான்.

போர்க்காலங்களில் வைத்திருந்த படைப்பிரிவுகளை அமைதிக்காலங்களிலும் பேணுவோம் என்று முரண்டு பிடிப்பது பொருத்தமான கொள்கையாக இருக்க முடியாது.

படைக்குறைப்பு செய்ய முடியாது என்ற பிடிவாதத்தில் இருந்தால் போர் முடிந்து எத்தனை ஆண்டுகள் சென்றாலும் பாதுகாப்புச் செலவீனங்களே அதிகளவு நிதி தொகையை விழுங்கும்.

அண்மைக் காலங்களாக பிரிட்டன் கூட தனது படைகளை குறைத்து வருகிறது.

1990ல் இரண்டேகால் லட்சம் பேராக இருந்து வந்த பிரிட்டிஷ் இராணுவத்தில் இப்போது இருப்பது வெறும் ஒன்றேகால் லட்சம் பேர்தான்.

பிரிட்டிஷ் இராணுவத்தில் நேபாளத்தின் கூா்க்காக்களைக் கொண்ட Royal Gurkha Rifles படைப்பிரிவு பெருமைக்குரியதொன்றாக இருந்து வந்தது.

படைக்குறைப்பினால் இப்போது இந்தப் படைப்பிரிவே இல்லாமல் போகும் நிலையை அடைந்துள்ளது.

இப்போது இதில் சுமார் 300 பேர் வரையில் தான் உள்ளனர்.

உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளே படைக்குறைப்பை மேற்கொள்ளும் போது இலங்கையால் அதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கில்லை.

வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஐநா அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு அதிக இடங்களைத் தரக் கோரினால் அதற்கு ஐநா சாதகமாகவே பதிலளிக்கும்.

ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் வடக்கில் இராணுவத் தலையீடுகளைக் குறைக்க வேண்டும் என்பதுவும் ஒன்றாக இருந்தது.

எனவே வடக்கில் இருந்து படைகளை விலக்கினால் அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்த முடியும் என்ற கேள்வி நகைப்புக்கிடமானது என்பதை முதலமைச்சரின் உரை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.

அடுத்து தேசிய பாதுகாப்புக்காக படையினரை நிறுத்தி வைத்திருப்பதான நியாயத்துக்கு அவர் ஒரு வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

வட மாகாண தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு முரணான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக கூறி வைக்கின்றோம் என்று ஒரு உறுதிமொழியை கொடுத்திருக்கிறார்.

இதற்கு மேலும் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டுவது அர்த்தமற்றது.

ஏனென்றால் பொறுப்பு மிக்க ஒரு மாகாண முதல்வர் இத்தகைய உறுதிமொழியைக் கொடுக்கிறார் என்றால் அதை ஏற்றுக் கொள்வதன் மூலம் அரசாங்கம் புதிய நம்பிக்கைக்கான வாசல்களைத் திறக்கலாம்.

அந்த உறுதிமொழி மீறப்பட்டால் முதலமைச்சரிடமே தட்டிக்கேட்க முடியும்.

ஆனால் அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கை கைவிடத் தயாராக இல்லை.

முதலமைச்சரின் உரை இடம்பெற்ற சில நாட்களில் கடந்த 29ம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்தவொரு சூழ்நிலையிலும் வடக்கில் இருந்து படைகளை விலக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அபிவிருத்திக்கும் அவர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வடக்கில் இருந்து வெளியேற்றினால் அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்துவது என்று மறந்தும் கூட கேள்வி எழுப்பவேயில்லை.

போர் அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட்ட நாடொன்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க படையினரை நம்பியுள்ளதென்றால் அது நவநீதம்பிள்ளை குறிப்பிட்டதைப் போல எதேச்சதிகாரம் நோக்கிப் பயணிக்கிறது என்றே அர்த்தம்.

நாட்டில் நிலவிய தீவிரவாதத்தை தோற்கடிக்க படைகள் தேவை என்று நியாயப்படுத்திய அரசாங்கம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அதே நியாயத்தைக் கூறுகிறது.

இது வடக்கை இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

வடக்கு மாகாண மக்கள் விரும்புவது போல படைவிலக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற பிடிவாதத்தில் அரசாங்கம் நிலைத்திருக்குமேயானால் அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கைகள் இன்னும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

– ஹரிகரன்

TAGS: