சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி போலியானதில்லை என்றால் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: ஹெல உறுமய

uthayagmmanpilaஇலங்கை மீது போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஒளிப்பரப்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் புதிய காணொளி உண்மையானது என்றால் மட்டும் அது பற்றி சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு நேற்று எழுதிய கடிதம் ஒன்றில் இந்த காணொளி சம்பந்தமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கேட்டிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தான் எமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடுகள் உள்ளன.

ஏனைய எந்த விடயங்கள் தொடர்பில் பரஸ்பர நிலைப்பாடுகள் இருக்க முடியும். அத்துடன் ஈபிடிபிக்கும் எமக்கும் இடையிலான நிலைப்பாட்டில் பாரிய வித்தியாசங்கள் இல்லை.

அமைச்சர் டகள்ஸ் விசாரணை நடத்துமாறு கூறுகிறார். அந்த காணொளி போலியானது இல்லையென்றால் மட்டும் விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானாலே எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இராணுவம் இது போலியானது என தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதை காணமுடிந்தது.

அந்த காணொளி போலியானது என்று ஆய்வுகளில் தெரியவந்தால் அது பற்றி விசாரணைகளை நடத்த வேண்டியதில்லை.

அதனை விடுத்து இராணுவத்தினர் அல்லது தனிப்பட்ட இராணுவ வீரருக்கு எதிராக உண்மையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது பற்றி விசாரணை நடத்தி இராணுவத்தின் மதிப்பை தற்காத்து கொள்ள வேண்டும் என்றார்.

TAGS: