வலி. வடக்கில் பொது மக்களின் காணிகளை நிரந்தரமாகவே கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. மேலும் தொடர்கின்றன. யுத்தத்தின் போது அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட மாட்டாது. அவை படைத்தரப்பின் பயன்பாட்டுக்கே என்ற செய்தி மீண்டும் மக்களைச் சேர்ந்துள்ளது.
முடிவடைந்த வாரத்தில், கடந்த 23 வருடங்களுக்கு முன் உயர்பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டு பின் மட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள் என அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் சொந்தமான வீடுகள் கேட்டுக் கேள்வியின்றி மீளவும் இடித்தழிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந் நிலைமை வடக்கின் அரசியலில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதாக அமைகின்றது.
கடந்த திங்கட்கிழமை கட்டுவன் பகுதியில் படைத்தரப்பினரால் வீடுகள் இடித்தழிக்க ஆரம்பிக்கப்பட்டமை என்பது, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் போருக்குப் பின்பாகவும் மீளத்திரும்ப முடியாதவர்களாகத் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிரச்சினை என்பதற்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் பிரச்சினையாகவுமே உள்ளது.
மேலும், மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய மக்கள் ஆணை மற்றும் அதன் பின்பாக அவர்கள் உள்ளங்களில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு வகையான நம்பிக்கை போன்றவற்றினையும் இச் சம்பவங்கள் மிகவும் கேள்விக்குட்படுத்தும் விடயமாகவே உள்ளன.
இராணுவத்தினரால் அவர்களின் வசமுள்ள கட்டுவனில் பொது மக்களின் வீடுகள் உடைக்கப்படுவதை அறிந்து அப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த இராணுவ அதிகாரிகளிடம் எதற்காக மக்களின் வீடுகளை அழிக்கின்றீர்கள் என மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு படையினருக்கான வீடுகளை அமைப்பதற்கே மக்களின் வீடுகளை அழிப்பதாக அங்கு பிரசன்னமாகியிருந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினருடன் சம்பவ இடத்திற்குப் பத்திரிகையாளர்கள், மாகாண சபை,உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் அப்பகுதிக்குச் சென்றிருந்தனர். இவர்களில் புகைப்பட ஊடகவியலாளர்கள் நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருந்தனர்.
இச் சம்பவம் பற்றி கருத்துரைத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, சட்ட ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை அங்கு தாம் மேற்கொள்வதாகக் தெரிவித்திருந்தார்.
இந்த இடத்தில் இராணுவத்தினரால் கூறப்படும் சட்ட ரீதியான சுவிகரிப்பில் உண்மை கிடையாது என ஏற்கனவே தமிழ் அரசியல்த் தலைமைகளால் மறுக்கப்பட்டுள்ளது. காணிகள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் இப் பிரச்சினை தொடர்பில் இக் கட்டுரைக்குக் கருத்துரைத்த வடக்கு மாகாண சபை உறுப்பினரும் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வியல் கற்கை விரிவுரையாளராகப் பணியாற்றுபவருமான கலாநிதி கந்தையா சர்வேஸவரன், தமிழ் மக்களின் வளமான காணிகள் கபளீகரம் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.
இவ்வாறாக முற்றின்றி வலி வடக்குப் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது. போரின் பின்பாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெருந்தடையாக அமையும் விடயங்களில் மிக முக்கியமானதோர் மனிதப் பேரவலம் நிறைந்த அத்தியாயமாகவே இப் பிரச்சினையுள்ளது.
இன்றும் வலி. வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்கடியேற்றம் நடைபெற வேண்டியுள்ளது. இக் கிராமசேவகர் பிரிவுகளில் பதினாறு கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாக மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை. அத்துடன் எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் பகுதியளவிலேயே மக்கள் மீளக்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இங்கு முழுமையான மீள்குடியேற்றத்திற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. மேற்கூறப்பட்ட மீளக்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத நிலப்பகுதியில் 6 ஆயிரத்து 496 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 514 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியவர்களாக கண்முன்னே இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர்.
மேலும் பலர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறாக வலிகாமம் வடக்கு பகுதிகளுக்குரிய மக்கள் கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் அகதி முகாம்களிலும் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
யாழ் மாவட்ட செயலகத்தில் காணி அமைச்சின் அலுவலகத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் காணிகள் சுவீகரிக்கப்படும் என்பதனை வெளிப்படையாகவே அப்போது தெரிவித்திருந்தார்.
அவர், வலி வடக்கில் 6 ஆயிரத்து 224 காணித்துண்டுகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளதாவும் அதில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட காணித்துண்டுகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை எனவும் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் கூறிய தரவுகள் ரீதியில் சுயாதீனமான ஆய்வுகள் தேவையாகவுள்ள அதேவேளை, அவர் கூறிய கருத்துக்கள் ரீதியிலும் பரந்துபட்ட பார்வைகள் அவசியமாகவுள்ளன.
அதாவது மேற்படி திறப்பு விழாவில் வலிகாமம் வடக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்துள்ள நீதிமன்ற நடவடிக்கை காரணமாகவே தீர்வு காண முடியாதிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த இடத்தில் வலி வடக்கில்,மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால் தான் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் தாமதமாகின்றன என்றால் யதார்த்தத்தில், மக்களை மீளக்குடியேற அனுமதிக்க அரசின் அதிகாரிகள் உடன்பட்டால் தாக்கல்செய்யப்பட்ட அவ் வழக்கின் அவசியம் தான் என்ன என சிந்தித்துப் பார்க்க முடியும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இம் மக்களது மீள்குடியேற்றம் பற்றி எடுத்துக் கூறியிருந்தது. எனினும் எதுவுமே அரசாங்கத்தினால் சரியாக அணுகப்படவில்லை. வலி வடக்குக் காணிகள் படைத்தரப்பின் பயன்பாட்டில் உள்ளமையினால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் குறைந்தபட்ச இயல்பு நிலைக்கேனும் திரும்ப முடியாதவர்களாகவுள்ளனர்.
அம் மக்கள் யாழ். குடாநாட்டின் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலுமே தங்கியுள்ளனர். இவ்வாறாக தங்கியுள்ளவர்கள் கடந்த இருபத்து மூன்று வருடகாலப்பகுதியில் தங்க முடியாத கஷ்டங்களை எல்லாம் தாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களின் பிரச்சினைகள் ஒவ்வொரு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இடைத்தங்கல் முகாம் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பப்படுகின்ற போதும் அவர்களது வாழ்வாதார நிலைமைகளில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
வலிகாமம் வடக்கு மக்கள் காலத்திற்குக் காலம் தாம் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்புவோம் என்ற அபிலாசையுடன் போராட்டங்களைக் கூட நடத்தியுள்ளனர். ஆனால் அவை எதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கப்படவில்லை. வலிகாமம் வடக்கு மக்களின் ஏமாற்றங்களுக்குத் தீர்வு இல்லையா என்னும் அளவுக்கு அம் மக்கள் போரின் பின்பாக தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாது ஏமாற்றப்படுகின்றனர்.
தற்போது கூட மக்களின் வீடுகள் வலி வடக்கில் இடித்தழிக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உடனடி முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதிலும் தாமதங்களே நிலவுகின்றன. இவ்வாறாக மக்களின் மீளத்திரும்பும் உரிமை மறுக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிவடைந்த மாகாண சபைத் தேர்தலிலும் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் பெரும் தாக்கம் செலுத்தியிருந்தது. ஆனால் ஆனால் தேர்தலின் பின்னர் இது பற்றிய துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாகாண சபையோ அல்லது அதன் பிரதிநிதிகளோ அதிகாரமின்றியே உள்ளனர்.
வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கள் மக்களின் மீள்குடியேற்றத்தினைத் தாமதப்படுத்துவதாக சில சமயங்களில் அவ்வப்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இக் கருத்துக்கள் இன்றைய நிலையில் இது பொருத்தமற்ற பொய்யாகவே பார்க்க முடிகின்றது. காரணம் இன்று ஆயுத மோதல்கள் நடைபெறவில்லை.
ஆகவே நாட்டின் தென்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயங்களாக சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட கேந்திர முக்கியத்துவமிக்க பகுதிகளில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியைச் சூழவுள்ள ஏனைய பகுதிகள் சகலவற்றிலும் சிவிலியன்கள் குடியிருக்கின்றார்கள் ஆயின் இது போன்று ஏன் வடக்கிலும் நிலைமைகள் வடிவமைக்கப்பட முடியாது என்ற கேள்வியுள்ளது?
இன்றுள்ள நவீன இராணுவ தளவாட வசதிகளுக்கிடையில், பாரிய நிலங்களில் மக்களின் நடமாட்டத்தினைத் தடுத்து தான் பாதுகாப்பினைக் கண்காணிக்க வேண்டும் என்றோ கட்டியெழுப்ப வேண்டும் என்றோ அவசியம் நடைமுறையில் கிடையாது.
இவ்வாறான நிலையில் மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு வலி வடக்கில் ஆயிரக்கணக்கான மக்களை விரட்டியடித்து விட்டுத்தான் அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என்ற நியாயம் எங்கும் கிடையாது.
வலிகாமம் வடக்கில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மண் அணையை அண்டியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த வீடுகள் படையினரால் இடித்து அழிக்கப்படுவதாக தொடர்ச்சியாகவே அவதானிக்கப்பட்டும் அதற்கான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன. இதன் ஒரு தொடர்ச்சியே இப்போதும் தொடர்கின்றது.
மேலும், வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளுக்கு அவர்கள் திரும்புவதற்கு மிதிவெடிகளும் தடையாகவுள்ளதாக படைத்தரப்பினால் நியாயம் கூறப்பட்டது. உண்மையில் வலிகாமம் வடக்கின் பகுதிகளில் இங்கு நிலைகொண்டுள்ள படையினர் உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்த எத்தனிப்பதாகவும் விவசாய முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் மக்களின் காணிகளில் மக்களை வெளியேற்றி விட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களுக்கு எதிராகக் கண்டனங்கள் உள்ளன.
இதனிடையே இவ்வாறான அடிப்படையற்ற நியாயங்கள் மக்களை இன நல்லுறவையோ போரின் பின்பான இயல்பு வாழ்க்கையினையோ நோக்கி அழைத்துச் செல்லாது. மாறாக மக்களை விரக்தியினுள்ளேயே தள்ளும். முரண்பாடுகள் மிக்க சூழலுக்கே மக்களை தள்ளும்.
இந்நிலையில் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்திற்கான அனுமதிகள் விரைவில் அளிக்கப்படவேண்டும். இவ்வாறாக மீள்குடியேற்றத்திற்கான அனுமதிகளை, காலந்தாழ்த்தப்படாமல் கபடத்தனமற்ற வகையில் மக்களின் நியாயபூர்வக் கோரிக்கை இதுவென புரிந்துகொண்டு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதுவே வலி வடக்கு மக்களின் வாழ்வியல் அவலத்திற்கும் உரிமை மறுப்பிற்கும் தீர்வாகும்.
தியாகராஜா நிரோஷ்