பாகிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்துவோம்: தலிபான் எச்சரிக்கை

mullah_fazlullah_002அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் இயக்கத் தலைவரான ஹக்கிமுல்லா மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதியும், அமைதிப் பேச்சுவார்த்தையை எதிர்த்தவருமான முல்லா பசுலுல்லாவைத் தங்களின் புதிய தலைவராக தலிபான்கள் இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

இன்று அவர் விடுத்த அறிக்கையில் பாகிஸ்தான் மீது தொடர் தாக்குதல்களை நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் பாதுகாப்புப் பிரிவினர், அரசு அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறையினரைத் தாக்க இருப்பதாக தலிபான்கள் இயக்கத்தின் தலைமைக் குழு எனப்படும் ஷுராவின் தலைவரான அசமத்துல்லா ஷாஹீன் தன்னுடைய மறைவிடத்திலிருந்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்துள்ளது என்று குறிப்பிட்ட ஷாஹீன் இந்த அரசு அமெரிக்காவின் கைப்பாவையாகத் திகழுகின்றது என்றும் கூறினார். இத்தகையத் தாக்குதல்களை பாகிஸ்தான் எதிர்த்து வருகின்ற போதிலும் அரசு தனிப்பட்டமுறையில் இவற்றை ஆதரித்துவருவதாகவே அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் முன்னிலையில் இல்லாத ஆப்கன் எல்லைகளின் தொலைதூரப் பகுதிகளில் இந்தத் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்.

எனவே இவர்களைப் பிடிப்பது பாகிஸ்தானிற்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்போது அமெரிக்கா தாகுதல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் ரகசியமாக வரவேற்கின்றது என்று கருதப்படுகின்றது. இதனால் கோபமுற்றுள்ள தலிபான் இயக்கத்தினர் தங்களின் தொடர்தாக்குதல் மூலம் பாகிஸ்தானை அச்சுறுத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் பிரதமரான நவாஸ் ஷெரிப்பின் அரசியல் கோட்டையான பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்கள் முக்கிய இலக்காகக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பொதுமக்கள் தாக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்கள் இந்தத் தாக்குதல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் ஷாஹீன் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, அந்நாட்டு அரசைக் கவிழ்த்து புதிய இஸ்லாமிய ஆட்சியினை உருவாக்கவும் தலிபான் இயக்கம் போரிட்டு வருகின்றது.