இந்தியா தீர்வைப் பெற்றுத் தருமென்றே ஒவ்வொரு தமிழனும் நம்புகிறான்: தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ரவிகரன் உரை

ravikaran_003தமிழ்நாட்டின் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உரையாற்றியுள்ளார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் கால நதியிலே, தனித்துவமான சரித்திரத் தீவுகள் பலவற்றைக் கொண்டிருக்கும் உலகின் மூத்த குடித் தமிழ்த் தேசிய இனத்தின், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காலப்பொறிப்பான முள்ளிவாய்க்கால் முற்றம், பூமியின் காலவெளியில் முரசறையப்படும் இத்தருணத்திலே, உயிர்த்தியாகம் செய்த உறவுகளை வணங்கி, அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எங்கள் மக்களின் ஆணைக்கிணங்க அவர்களின் குரலாக இங்கு ஒலிக்கிறேன்.

இன்றைய நாள் தமிழின வரலாற்றில் மிக முக்கிய நாள்.

காலமே கதறி அழுத கடும் பேரழிவுகளைச் சந்தித்த நாம், அந்த அழிவுகளை ஆயுதமாக்கி போராடுகிற காலகட்டத்தில், எங்கள் அவலங்களை ஆலயமாக்கி வழிபடுகிற நாள். வீரம் விளைந்த தஞ்சை மண்ணிலே, கோயில் வடிவில் எழுந்து நிற்கிற, வீரம் விதைந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நாம் பூசிக்கிற முதல் நாள்.

மொழிக்காக தம்மை தியாகித்தவர்களையும், தொப்புள்கொடி உறவுகளுக்காக தம்மை எரித்து , தமிழினத்தின் தேசிய ஆன்மாவினுள் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்களையும், ஈழத்தில் விதையானவர்களையும் ஒருங்கே காண்கிற முதல் நாள்.

இது எங்கள் அழிவின் காட்சி மட்டுமல்ல. ஆற்றலின் நீட்சி. தமிழரின் கலை ஆட்சிக்கு மகத்தான சாட்சி. இப்பெருமைக்குரிய தமிழ்த் தேசியச் சின்னம் பிறந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நாளிலே, முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து வந்துள்ள நான், எங்கள் உணர்வுகளை பதிவு செய்கிறேன்.

எம் மண்ணின் தேசிய அடையாளங்கள் என்றுமில்லாத வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. இம்மண்ணில் பிறந்த பிள்ளைகள், இம்மண்ணிற்காக உயர்நீத்த பிள்ளைகள், எம் தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த எங்கள் பிள்ளைகளான மாவீரர்களின் நினைவிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எதற்காக அழிக்கப்படுகின்றன

எம்மிடமிருந்தும் எம் நினைவுகளில் இருந்தும் அவர்களைப் பிரிப்பதற்கா? அது ஒரு போதும் நடைபெறாது. அவர்களின் மூச்சுக்காற்று இன்னமும் எம்முடன் கலந்தே இருக்கின்றது. அக்காற்றைத் தான் எம் மக்கள் சுவாசிக்கிறார்கள். மறவர்கள் சிந்திய இரத்தம் எங்கள் கடல் நீரிலே கலந்தே இருக்கின்றது.

அந்த நீரைப்பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உட்கொள்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்தில் நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ண அலைகள் ஈர்க்கின்றன.

இப்படி காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும், நீரிலும், எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக் கலந்தவர்களை எம்மிடமிருந்து எப்படிப்பிரித்து விட முடியும்.?

பயம் அறியாதவன் படை நடத்திய பூமியில் பள்ளிக்கூடம் போனவர்கள் நாங்கள்..படுத்து உறங்கியவர்கள் நாங்கள்.. உண்மையை உரக்கச் சொல்வதில் யாருக்கும் அஞ்சமாட்டேன். வடமாகாணசபையில் வெற்றி பெற்றிருக்கிற 30 பெரும் எம் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம்.

பல்வேறு உலக நெருக்கடிகளின் போதும், ஈழத்தமிழர்கள் இந்திய ஆதரவு மனநிலையிலேயே இருந்திருக்கின்றனர். இந்தியாவைத் தவிர்த்து நாம் என்றும் எண்ணியதில்லை. காந்தியையும், சுபாஸ் சந்திரபோஸையும் இன்றும் எம் மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்திலே காந்தி சிலை உடைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

முள்ளிவாய்க்காலில் பலியான ஒவ்வொரு தமிழனும் தன இறுதி நிமிடம் வரை இந்தியா உதவிக்கு வரும் என்று தான் காத்திருந்தான். இன்று எஞ்சியிருக்கிற ஒவ்வொரு தமிழனும் இந்தியா எமக்கான தீர்வைப் பெற்றுத்தரும் என்றே நம்புகிறான்.

ஈழ மக்களின் ஆழமான ஆத்மீக ஏக்கமும் ஆசையும் அதுவே. எனவே இந்த இந்திய தேசம் எம் மக்கள் தொடர்பில் தீர்க்கமான உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.

எமக்காக இன்று தமிழகம் ஒரு வரலாற்றுச் சின்னத்தை அமைத்திருக்கிற இவ்வேளையில், உங்கள் அனைவருக்கும் எங்கள் மக்கள் சார்பாக அன்பையும் நன்றியையும் தெரிவிக்கிறேன் என்றார்.

TAGS: