யாழ். : உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது என்று மரண அச்சுறுத்தல்

palaliவலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீள்குடியேற்ற வேண்டும் என்றும் கோரி நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருந்தவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவருக்கும் உபதலைவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலமாகவும், கைத்தொலைபேசியின் குறுந்தகவல்கள் மூலமாகவும் தங்கள் இருவருக்கும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பற்றி பேசக் கூடாது, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, நாளை நடத்தவுள்ள உண்ணாவிரதம் கைவிடப்பட வேண்டும் எனக்கூறி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் நேற்றிரவு இருவருடைய வீட்டு வளவுகளின் நுழைவாயிலிலும் துண்டிக்கப்பட்ட மாட்டின் தலைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் சுகிர்தன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ள இவர்கள் இருவரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றனர்.

காமன்வெல்த் காலத்தில் போராட்டம்

வலிகாமம் வடக்கில் மக்கள் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று

இதேவேளை, பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியுள்ளதையடுத்து, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குப் பொது அமைப்புக்கள் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் பொதுநலவாய உச்சி மாநாடு முடியும் வரையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளைப் பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும் எனக்கோரி தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை தெல்லிப்பழை பகுதியில் நடத்துவதற்கும் எற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. -BBC

TAGS: