இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வராமை தமிழ் மக்களுக்கே பாதிப்பு: பிரபா எம்.பி

praba_mp_002பொதுநலவாய மாநாட்டில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி உட்பட வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருக்கும் உறவானது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை கொண்டே உருவானது. இருப்பினும் இன்று இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இந்திய நாடே காவலனாக இருக்கின்றது என்பதே எனது எண்ணமாகும்.

யுத்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து இம் மாநாட்டில் தமது பிரதமரை கலந்து கொள்ள கூடாது என்று தமிழக அரசியல் தலைமைகள் வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் உட்பட ஏனைய பலரும் களமிறங்கியிருப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை இவர்கள் இந்த பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கை கலந்து கொள்ள அனுமதிக்காததன் மூலமாக இலங்கை இந்திய இராஜதந்திர உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கான பிரச்சினையில் இந்திய அரசு தலையிடும் பொழுது அதனை இலங்கை அரசாங்கம் புறக்கணிப்பதற்கு சாதகமாக இவ்விடயம் அமைந்து விடும்.

இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் தமது சொந்த விளம்பரத்திற்காக போட்டியிட்டு மேலும் எமது பிரச்சினையை சிக்கலாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எது எப்படியிருப்பினும் இலங்கையில் வாழும் 16 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்தும் இந்தியா முன்னிற்கும் என்று நம்புகின்றேன். இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாடும் எமது பிரச்சினையில் முழுமையான அக்கறை செலுத்தாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்தியா விலகி நிற்பதன் மூலம் ஒரு போதும் எமது பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது. இதனை இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாக புரிந்துள்ள நிலையிலும் தேர்தல் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடிப்பணிய வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம். இது தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு அல்ல எமக்கே துரதிஷ்டமான விடயமாகும்.

வடமாகாண முதலமைச்சர் கூட இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தார். அது மட்டுமின்றி இந்திய பிரதமர் கலந்து கொண்டால் தான் எமது பிரச்சினைகளை வெளிகொண்டு வரலாம் என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால் பின்பு வேறு பல அழுத்தங்கள் காரணமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை நான் ஒரு போதும் கண்மூடிக்கொண்டு ஆதரித்ததில்லை. அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று  குறிவைத்து எதிர்க்கட்சி அரசியல் செய்வது வேறு. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான போராட்டம் என்பது வேறு.

வெறும் எதிர்க்கட்சி அரச எதிர்ப்பு கோஷத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கமித்து விடுவார்களேயானால் ஒரு போதும் எமது மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த இருந்தாலும் சரி ரணில் வந்தாலும் சரி எமது மக்களுக்கான தீர்வை நாம் தான் போராடி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் கரங்களை பற்றிப் பிடித்து இந்நாட்டில் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாததன் மூலமாக மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் இழந்து விட்டோம் என்றார்.

TAGS: