ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கமலேஷ் சர்மா பொதுநலவாய கொள்கைகளை காப்பாற்ற விளைகிறாரா அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் பதினாறு அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான விதிகளான ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரத்தை வலியுறுத்தும் சகிப்புத்தன்மை, பேச்சு சுதந்திரம், நீதி- பாராளுமன்றம்- நிர்வாகம் ஆகியவற்றின் பரஸ்பர சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, சுகாதாரம்- கல்வி- குடிநீர் ஆகிவற்றுக்கான உரிமை ஆகிய எட்டு விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கறை படிந்த வரலாற்றை செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கழுவி சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்த முனைய கூடாது.
பொதுநலவாய கொள்கைகளை அமுல் செய்யும்படி ஏனைய பொதுநலவாய நாடுகளுக்கு உபதேசம் செய்ய முன் தனது சொந்த நாட்டில் அவற்றை அமுல் செய்து உலகத்துக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளும்படியும், இவற்றுக்கு முதற்படியாக கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை முழுமையாக அமுல் செய்யும்படியும், பொதுநலவாயத்தின் புதிய தலைவரான மகிந்த ராஜபக்சவை, கமலேஷ் சர்மா வலியுறுத்த வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.
இந்த பணியிலிருந்து கமலேஷ் சர்மா தவறுவாராயின், புதிய தலைவர் மட்டும் அல்ல, கமலேஷ் சர்மாவும் தனது பதவிலிருந்து விலகி வீடு போக வேண்டி வரும்.
இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களை காப்பாற்றுவதில் ஐநா தவறிவிட்டது என ஐநா செயலாளர் நாயகம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது இந்த நாட்டில் யுத்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என அவர் கோடிட்டு காட்டுகின்றார்.
சனல்-4 தொலைகாட்சியில் காட்டப்பட காணொளிகள், படுகொலைகள், காணாமல் போனோர், தடுத்து வைகப்பட்டுள்ளோர் ஆகிய விவகாரங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை செய்வதாக அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில், இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் ஏற்றுகொண்டனர்.
ஆனால், இந்த ஊடக மாநாடு நடக்கும் இவ்வேளையில்கூட, கொழும்பில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வடக்கில் இருந்து வந்து கொண்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் இலங்கைக்குள் விசா வாங்கிகொண்டு வந்துள்ள சனல்4 தொலைகாட்சி ஊடகவியலாளர் கெலும் மக்ரே வடக்கு நோக்கி செல்லும்போது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டுள்ளார்.
இவை என்ன? இந்த நாட்டில் மனித உரிமை, பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவை இருக்கின்றனவா? பொதுநலவாயத்தின் 53 நாடுகளுக்கும், பொதுநலவாய பிரகடனத்தில் அடங்கியுள்ள பல்வேறு கொள்கை விதிகளை அமுல் செய்யும்படி கூற வேண்டிய, இந்த அமைப்பின் புதிய தலைமை நாடான இலங்கை, தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள போகும் இன்றைய வேளையிலேயே பொதுநலவாய கொள்கை பிரகடனத்தை அப்பட்டமாக மீறுகிறது. இந்த நிலைமைக்கு பிரதான பொறுப்பை கமலேஷ் சர்மா ஏற்றுகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் பொதுநலவாய மாநாடு நடக்க கூடாது என்றும், அதற்கான தகுதி இந்த நாட்டு அரசாங்கத்துக்கு இல்லை என்றும், நாங்கள் சொன்னோம். இதையே சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சொல்கின்றன.
இதையே இந்தியாவை சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் சொல்லுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றி, பாதுகாத்து, இம்மாநாடு இந்த நாட்டில் நடைபெற பெரும் பங்களித்தவர் கமலேஷ் சர்மா ஆகும்.
இந்நிலையில், இனி எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் கமலேஷ் சர்மா இறங்கக்கூடாது. செயலாளர் நாயகம் என்ற முறையில் அவர் பொதுநலவாய அமைப்புக்கு பொறுப்பு கூறவேண்டுமே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு அல்ல.
புதிய தலைமை நாடான இலங்கையை, தனது சொந்த கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை ஒப்புகொண்டபடை அமுல் செய்யும்படியும், பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின் படி நாட்டை நடத்தி செல்லும்படியும், கமலேஷ் சர்மா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவுரை கூற வேண்டும். இது நடக்காவிட்டால் தலைவரும், செயலாளர் நாயகமும் பதவி விலக வேண்டும் என்றார்.
குனிந்து கூஜா தூக்கும் முத்தேவிகள் எல்லாம் எதோ பெருசாக வாங்கி விட்டது என்று ஆர்த்தம் – Body Language!