காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அ,னுப்பி வைத்திருக்கின்றனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு பஸ் வண்டிகளில் புறப்பட்டுச் சென்றவர்களை மதவாச்சி சோதனைச்சாவடியில் பொலிசாரும் படையினரும் வழிமறித்து தடுத்து வைத்திருந்தனர். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களைப் பின்னர் பொலிசார் கொழும்புக்குச் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு திரும்பி வந்தவர்கள் வவுனியா நகரசபை முன்றலில் கூடி, செய்தியாளர்களிடமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிடமும் தமது உள்ளக்குமுறல்களை வெளியிட்டனர்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கும் மேலாகின்றன. ஆயினும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும், அரசாங்கத்தின் உறுதிமொழியையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்து தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் இன்னும் உரிய பதிலளிக்காமலும், பொறுப்பு கூறாமலும், இருப்பதையடுத்தே தாங்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலக நாட்டுத் தலைவர்களின் கவனத்தையீர்த்து நியாயம் கேட்பதற்காகச் சென்றதாகவும், அவ்வாறு சென்ற தங்களை வழிமறித்து பலாத்காரமாகத் திருப்பி அனுப்பியது இந்த நாட்டின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற மனித உரிமை மீறல் என்று அழுது தெரிவித்தனர்.
காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான தங்களைக் கொழும்பு செல்லவிடாமல் தடுத்திருப்பது குறித்தும் தமக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்தும் கேள்வி கேட்பார் எவரும் இல்லையா என அவர்கள் அழுது வினவினார்கள்.
மன்னாரில் இருந்து சென்றவர்களும் தடுக்கப்பட்டனர்
இதேவேளை, கவனயீர்ப்பு நடவடிக்கைக்காக மன்னாரில் இருந்து பஸ் வண்டியொன்றில் புறப்பட்டு வந்த மற்றுமொரு தொகுதியினரை பொலிசாரும், இராணுவத்தினரும் மன்னார் வீதி கட்டையடம்பன் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
பஸ் வண்டியில் இருந்து இறங்கிய காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் பிரதான வீதியை மறித்து போக்குவரத்தைத் தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஒரு மணித்தியாலம் வரையில் மன்னார் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
எனினும் அவர்கள் கொழும்பு செல்வதற்கான அனுமதி வழங்கப்படாததையடுத்து, அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். -BBC