இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான் வந்துள்ளேன்! சல்மான் குர்ஷித்

Salman-kurjit (2)இரு நாட்டு உறவுக்காக, நான், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான், இலங்கை வந்துள்ளேன். இவ்வாறு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், காமன்வெல்த் மாநாடு, நாளை துவங்குகிறது. “இந்த மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது’ என, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழும்பிய எதிர்ப்பு காரணமாக, பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். ஆனால், இந்தியாவின் சார்பில், இந்த மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், வெளியுறவு செயலர் சுஜாதா சிங்கும், கொழும்பு சென்றுள்ளனர்.

தமது இலங்கை விஜயம் குறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுிருப்பதாவது,

இரு நாட்டு உறவுக்காக, நான், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான், இலங்கை வந்துள்ளேன்.

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, இந்திய அரசு, 15 ஆயிரம் வீடுகளை கட்டித் தந்துள்ளது, சாலைகளை அமைத்துள்ளது, இன்னும் பல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, செய்து தந்துள்ளது.

இந்த உதவிகளை செய்யும் போது, “இதையெல்லாம் செய்யாதீர்கள்’ என யாரும் தடுக்கவில்லை. ஆனால், தற்போது, கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என, எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு, எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

நாங்கள் இலங்கைக்கு வராவிட்டால், இந்த நலத்திட்ட உதவிகளை எப்படி செய்ய முடியும்? தேச நலனை கருத்தில் கொண்டு தான், நான் இந்த மாநாட்டில் பங்கேற்கிறேன். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

TAGS: