இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!

TNAவடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி. க்கள் சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இரா. சம்பந்தன் கூறியதாவது:

வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்ற பின்பும் நில உரிமை வழங்கப்படவில்லை. அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரால் பெண்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே இராணுவத்தினர் அத்துமீறி நடந்து கொண்டதால் அப்பகுதி பெண்கள் பாதுகாப்பற்ற அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

வடக்கு மாகாணத்தின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. போரின் போது காணாமல் போன ஏராளமானோர் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது போன்று தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

எங்களது கோரிக்கையை கவனத்துடன் கேட்டுக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை செயலர், இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று உறுதியளித்தார் என்றார் சம்பந்தன்.

TAGS: