இலங்கை மனித உரிமை பிரச்சினைகளை நிவர்த்திக்க தவறினால், சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது: பிரித்தானியா

david-cameron_2எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் இலங்கை மேலும் முன்னேற்றமான முனைப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

அடிப்படையான விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்டுள்ள இந்த பணிகள் பராட்டத்தக்கது.

இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். அதனை நான் செய்துள்ளேன்.

30 வருட மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் ஏற்படக் கூடிய சாத்தியமான நிலைமைகள் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எவரும் விடுதலைப்புலிகளின் காலத்தை நோக்கி திரும்ப வேண்டியதில்லை. அவர்கள் மேற்கொண்ட கொடூரமான விடயங்களில் இருந்து விடுப்பட வேண்டும்.

மூன்று தசாப்த கால போருக்கு பின்னர் இலங்கையை அதில் இருந்து மீட்டெடுக்க காலம் அவசியம். இலங்கையின் மீளமைப்பு பணிகளுக்கு பிரித்தானிய தனது உதவிகளை அதிகரிக்கும் என்றார்.

பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் அதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

TAGS: