யாழில் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் தமிழர்களின் உடையில் 350 புலனாய்வாளர்கள்

camaron_jaffna_006பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தில் சிவில் உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர்கள் சகல இடங்களிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில், வடக்கு பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் அறிவுரையின்படி யாழ்.நகர பிராந்திய இராணுவ தலைமையகத்தின் அதிகாரியான மேஜர் ஆர்.கே.யு. பத்திரணவின் மேற்பார்வையில் 350 இராணுவ புலனாய்வாளர்கள் சிவில் உடையில் சாதாரண மக்கள் நடமாடும் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்களை போன்று இவர்கள் யாழ். நகரில் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. இவர்களுடன் 22 இராணுவ அதிகாரிகளும் இருந்தாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ்களில் தலா 4 இராணுவ புலனாய்வாளர்கள் சிவில் உடையில் பயணம் செய்தனர்.

கொழும்புக்கு வரும் தமிழ் மக்கள் மாநாட்டுக்கு வந்துள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள் என்ற அச்சத்தில் அரசாங்கம் இப்படியான நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

அத்துடன் கொழும்பு நகரிலும் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் சிவில் உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு பொறுப்பாக அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர், இராணுவ கப்டன் ஆர்.ஈ.எஸ்.நந்தவீர ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

TAGS: