இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆப்ரிக்கா கோரியுள்ளது.
போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆப்ரிக்கா தயாரகவுள்ளது என்று அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார்.
தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்தித்துள்ளது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையை கையாண்டு பிரச்சினைகளை தீர்த்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே தற்போது உயர்ந்த மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் ஜூமா தெரிவித்தார்.
அவகாசம் தேவை:மஹிந்த
எனினும் தமது நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு சிறிது காலமாகும் என்றும், அதற்கான அவகாசம் தேவை எனவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் அதற்கான வழிமுறைகள் தொடங்கியுள்ளன என்றும், நாட்டின் அரசியல் சாசனத்துக்கு அமையவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று ஆரம்பித்து நாளை முடிந்துவிடக் கூடிய விஷயம் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தென் ஆப்ரிக்க அதிபரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்கா காட்டும் ஆர்வம் தமது தரப்பில் கவனத்தில் எடுக்கப்பட்டு, வரும் நாட்களில் பரிசீலிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக இந்த விஷயம் தொடர்பில் ஈடுபட்டு வரும் இந்தியாவுடனும் மற்ற நாடுகளுடனும் இந்த முன்னெடுப்பு ஆலோசிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. -BBC
நீங்க இந்தியா2 என தொங்கிக்கொண்டு இருந்தும் அந்த கபோதிகள் உங்களுக்கு துரோகமே செய்து வருகின்றனர். இன்னும் அதே பல்லவிதானா? நம்புங்கள் மற்ற நாட்டை; மறந்து விடுங்கள் இந்திய கபோதியை.