பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் மனித உரிமை மீறல் என்ற குண்டு வீச்சால் இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரதமர் டேவிட் கமரூன், வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின் கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் மீது எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்த வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்தார்.
அவ்வாறான விசாரணைகளை இலங்கை அரசாங்க நடத்த தவறினால் அது தொடர்பான ஐக்கிய நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்து சர்வதேச விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் எதிர்பார்க்காத விதமாக பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அதிரடியான கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் தற்பொழுது பல வகையான கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியதுடன் இலங்கை சுதந்திரமான நாடு என்பதால் இலங்கையின் பிரச்சினையை இலங்கை தீர்த்து கொள்ளும் என்று கூறினர்.
கமரூன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைக்கப்பட்டதாகவும் அவர் ஆலோசனைகளை வழங்க முடியும் எனவும் நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்பட்டு இலங்கை அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இலங்கையில் நடவடிக்கைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் பேரில் நடந்த மனித உரிமை மீறல்களை கவனத்தில் கொள்ளாமல் இரு்கக முடியாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்த கமரூன், இரண்டு தரப்பிலும் காரசாரமான மற்றும் நேரடியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தான் முன்வைத்த சகல விடயங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சகல பிரதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இன்னும் கால அவகாசத்தை தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கமரூனிடம் கோரியதாக ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்தது.
எவ்வாறாயினும் இறுதியில் இந்த விடயங்கள் தொடர்பில் தகவல்களை முன்வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடக சந்திப்பொன்றை நடத்த நேரிட்டது.
மூன்று, நான்கு மாதங்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதால் காலம் தேவைப்படுகிறது எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் செயற்பாட்டு திட்டத்தின் ஊடாக ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.
சார் உலகமே நாடக மேடை அதில் பிரித்தானிய பிரதமரும் இலங்கை அரசும் நடிகர்கள்.
இலங்கையில் நடை பெற்ற காமன்வெல்த் மாநாட்டை உருமாற்றி விட்டார்கள் பிரிட்டன் பிரதமரும்,சனல் 4 இயக்குனர் கெலும் மெக்ரெ!இப்போது அது உள்நாட்டு பிரச்சனை அல்ல கடல் தாண்டிய பிரச்சனை என்று ரஜபச்செவுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய கதாநாயகர்கள்!