இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு பெண்களே தலைமை தாங்குவதாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விதவைகள் மாநாட்டிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து மூவினங்களையும் சேர்ந்த விதவைகள் செயலணிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களது ஆற்றலை மேம்படுத்தல் தொடர்பாக ஆராய்யப்பட்டு அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் பிரகடனமொன்றும் இங்கு வெளியிடப்பட்டது.
இராணுவம் குறைக்கப்பட வேண்டும்
பாதுகாப்பு, வாழ்வாதாரமும் சமூக பாதுகாப்பும், சலுகைகளும் உதவித் திட்டங்களும், கல்வி, சுகாதாரமும் சத்துணவும், சமூக கலாச்சார விடயங்கள், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக அந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
தமது பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாலும் இராணுவ நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் இராணுவத்தின் பாலியல் வன்முறைகளுக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது என்று அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
அதனால் தமது பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும் தமது பாதுகாப்புக்குரிய காவல்துறை தமது கடமையை சரிவரசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘கணவரை இழந்த பெண்களும் கணவரிடமிருந்து பிரிந்துவாழும் பெண்களும் சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சிலசமயங்களில் எமது ஆடைகளும் நடத்தைகளும் கூட விமர்சிக்கப்படுகின்றன. மீண்டும் குடும்ப பந்தத்தில் இணையவிரும்பும் பெண்கள் சமூகத்தின் அவச்சொல் குறித்துப் பயப்படும் நிலை இருக்கின்றது’ என்றும் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்
‘காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை, தடுப்பில் இருப்பவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனை பெறுவதற்கோ அவர்களின் வழக்கைத் தொடரவோ எமக்கு வசதிகள் இல்லை, கணவரின் இறப்புக்கு வழங்கப்படும் நட்டஈடு சீரான முறையிலோ போதுமானதாகவோ இருப்பதில்லை’ என்றும் குடும்பத் தலைவிகள் கூறியுள்ளனர்.
‘எமது குடும்பங்களைச் சேர்ந்த காணாமல் போனோரைப் பற்றிய தகவல்களை அரசு எமக்குத் தரவேண்டும்’ அவர்கள் கோரியுள்ளனர்.
தடுப்புக் காவலில் இருப்போர் விடுதலையாக வேண்டும் என்றும் அதற்கான சட்ட உதவிகளும்வழக்குகளின் முன்னேற்ற விபரங்களும் குடும்பங்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘காணாமல் போனோர் தொடர்பாக புலன் விசாரணை செய்வதற்கு ஆண் அலுவலர்கள் எமது வீடு தேடி வருவது பாலியல் தொந்தரவுகளுக்கு இட்டுச் செல்லுகின்றது. இது சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் எம்மை ஆளாக்குகின்றது. தனியே வாழும் பெண்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு பெண் காவல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும்’ என்றும் விதவைகள் மாநாட்டில் கோரப்பட்டுள்ளது. -BBC