‘இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டிவரும்’

unpஇலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை கடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டின் இறுதியில் அரசு தலைவர்கள் வெளியிட்டுள்ள இணக்கப்பாடுகளின்படி, இலங்கையின் மனித உரிமை விவகாரம் சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் முன்னால் கொண்டுசெல்லப்பட வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

‘காமன்வெல்த் மாநாட்டின் இறுதியில் அரசு தலைவர்கள் இணங்கி வெளியிட்ட பிரகடனத்தில் உள்ள 98 விடயங்களில் 39வது பிரிவு மிக முக்கியமானது. அதன்படி, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வியன்னா பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துக்கொண்டுள்ளது’ என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.

‘இதனால், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும், அதனை மீறினால் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட முடியும். ஆனால் இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அதை மறைக்கிறது’ என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார் திஸ்ஸ அத்தநாயக்க.

‘இலங்கை வாக்குறுதி அளித்துள்ளதன்படி, தன்மீதுள்ள மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை வரும் மார்ச் மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்வதேச மட்டடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருந்தார். எங்களின் விடயங்களில் சர்வதேசம் விரல் நுழைக்க ஏன் நீங்கள் இடமளிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அரசிடம் கேட்கிறோம்’ என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்.

இலங்கையின் எந்தவொரு குடிமகனையும் போர்க் குற்ற நீதிமன்றத்துக்கோ வேறு எந்த நீதிமன்றத்துக்கோ கொண்டுசெல்ல சட்டம் எதுவும் இல்லை என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சி, 2002-ம் ஆண்டில் ரோம் சமவாயம் கைச்சாத்திடப்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கைச்சாத்திடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

இலங்கை வாக்குறுதி அளித்துள்ளதன்படி எல்எல்ஆர்சி அறிக்கையை நடைமுறைப்படுத்தி, விசாரணைகளை நடத்தி உரிய காலத்தில் முடிக்காவிட்டால் சர்வதேச தலையீடுகளை இலங்கை எதிர்கொண்டுதான் ஆகவேண்டிவரும் என்கிற நிலையே ஏற்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். -BBC

TAGS: