இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் யுத்தம் மற்றும் அசம்பாவிதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஆட்சேதங்கள் மற்றும் சொத்து அழிவுகள் தொடர்பான கணக்கெடுப்பை அரசாங்கம் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.
‘நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கணக்கெடுப்பு அதிகாரிகள் சென்று தகவல்களைத் திரட்டுவார்கள். 1982-ம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவங்களில் எவராவது காணாமல் போயிருக்கிறார்களா, உயிரிழந்திருக்கிறார்களா அல்லது காயப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று தகவல் திரட்டுவார்கள்’ என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் உள்ளூராட்சி, உள்துறை அமைச்சின் செயலாளர் பீ.பி. அபேகோன்.
புள்ளிவிபர திணைக்களத்தினூடாக உள்ளூராட்சி, உள்துறை அமைச்சு இந்தக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
‘முதலில் எல்-1 என்கின்ற படிவத்தில் தகவல்கள் திரட்டப்படும். அந்தப் படிவத்தில் அப்படி ஏதாவது தகவல் கிடைத்தால் எல்-2 என்ற இன்னொரு படிவம் கொடுக்கப்பட்டு அதில் அந்தத் தகவல்களைத் திரட்டிக்கொள்வோம். டிசம்பர் மாதம் 20-ம் திகதிக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும்’ என்றார் பீ.பி. அபேகோன்.
’40 ஆயிரம் பேர்’ பற்றி ஆராயப்படுமா?
இந்த கணக்கெடுப்பின் நோக்கம் என்ன, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு கூறியது. உங்களின் கணக்கெடுப்பில் அதுபற்றியும் ஆராயந்து உண்மை நிலை வெளிப்படுத்தப்படுமா? என்று தமிழோசை கேள்வி எழுப்பியது.
‘நாங்கள் எல்எல்ஆர்சி பரிந்துரைகளின்படித் தான் இதனைச் செய்கிறோம். இந்த உயிரிழப்பு எண்ணிக்கைகள் எல்லாம் எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் தான் சொல்லப்படுகின்றன. எந்தக் கணக்குச் சரி, எது பிழை என்று உறுதிப்படுத்துவது அல்ல எமது நோக்கம். உண்மையில் நடந்தது என்ன என்று சரியான தகவல்களை அறிந்துகொள்வது தான் எங்கள் நோக்கம்’ என்றும் அபேகோன் பதிலளித்தார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் குடும்பங்களில் எவராவது விடுதலைப் புலிகளாக இருந்தார்கள், அல்லது இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள் போன்ற விபரங்களை அச்சமின்றி வெளியில் வந்து சொல்வார்கள் என்று நினைக்கிறீர்களா? என்றும் தமிழோசை வினவியது.
‘இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. எந்த அடிப்படையில் அப்படியான அச்சம் ஏற்படுகின்றது என்று தெரியவில்லை. இங்குள்ள கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு எல்லா விபரங்களும் தெரியும்’ என்றார் உள்துறை அமைச்சின் செயலாளர்.
சரியான எண்ணிக்கை கிடைக்குமா?
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக அழிந்துவிட்டதாகவும் செய்திகள் வந்திருந்தன. அந்தக் குடும்பங்களின் தகவல்களை எப்படித் திரட்டப் போகிறீர்கள் என்று கேட்டபோது, ‘உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் இருட்டில் தேடிக் கொண்டிருப்பதற்குத் தான் உங்களில் பலருக்கும் விருப்பம். அப்படியென்றால் தான் ஆளாளுக்கு விருப்பமான மாதிரி ஒவ்வொரு எண்ணிக்கைகளைக் கூறிக்கொண்டிருக்க முடியும்’ என்றார் அபேகோன்.
‘மீள்குடியேற்ற அமைச்சினால் திரட்டப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலகங்கள் போன்ற எங்களின் நிர்வாகக் கட்டமைப்புகள் ஊடாக இந்த விபரங்களை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். உலகத் தரத்தில், குறைபாடுகளுக்கு இடம்கொடுக்காமல் கணக்கெடுப்புகளை நடத்திக்காட்டியுள்ள புள்ளிவிபர கணக்கெடுப்பு திணைக்களம் தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறது’ என்றும் கூறினார் இலங்கையின் உள்ளூராட்சி மற்றும் உள்துறை அமைச்சின் செயலாளர் பீபி அபேகோன். -BBC
தமிழன் இன்னும் இருக்கானா ,இல்ல ஒளிஞ்சி போயிட்டானா என்ற கணக்கெடுப்பா