இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கருத்தேதும் தெரிவிக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.
பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியொன்றில் , சம்பந்தன், இந்த கணக்கெடுப்பு எவ்வாறு நடக்கும், இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும், ஏற்பட்ட இழப்புகளை உண்மையாக கணக்கெடுக்கும் வகையில் இருக்குமா அல்லது மூடி மறைக்கும் முயற்சியாக இருக்குமா என்பதையெல்லாம் பார்த்துத்தான் ஒரு கருத்தைத் தெரிவிக்க இயலும் என்றார்.
போரின் போது வன்னியில் சிக்கியிருந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு முதலில் மிகவும் குறைத்தே காட்டிவந்தது, சுமார் 30,000 பேர்தான் அங்கே சிக்கியிருக்கிறார்கள் என்றே கூறிவந்தது. ஆனால் போரின் முடிவில் அப்பகுதியிலிருந்து சுமார் மூன்று லட்சம் பேர்வரை வெளியே வந்தார்கள்.
போரில் சிவிலியன்கள் இருந்த இடங்கள் ஷெல்தாக்குதலுக்கு உள்ளாகின , மருத்துவமனைகள் கூட குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகின என்றெல்லாம் கூறப்படுகையில், போரில் இறந்த சிவிலியன்களின் எண்ணிக்கை பெரிதாகத்தான் இருக்கும், இதை ஐ.நா மன்ற தலைமைச்செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவே சுட்டிக்காட்டியது என்றார் சம்பந்தன்.
எனவே, இலங்கை அரசு தொடங்கியிருக்கும் இந்த முயற்சியை இப்போது வரவேற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, அந்த முயற்சியை நாங்கள் அவதானிப்போம் என்றார் சம்பந்தன். -BBC