எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். – தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

Logo-LTTEஎமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும், துன்பங்களையும் அழிவுகளையும், கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை.

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/13
தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27/11/ 2013.

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எமது மண்ணையும் மக்களையும் மொழியையும் காக்கவென்று எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி தமது இன்னுயிர்களை எமக்காய் ஈந்த மறவர்களின் நினைவுநாள்.

உலக அரங்கில் தனித்துவமான ஓர் அடையாளத்தை எமது இனத்துக்கும் போராட்டத்துக்கும் பெற்றுத் தந்தவர்கள் இந்த மாவீரர்கள். இவர்களின் அர்ப்பணிப்பாலேயே இன்று உலகின் கண்களில் எமது விடுதலைப் போராட்டம் கவனத்தைப் பெற்று நிற்கின்றது.

வல்லாதிக்கச் சக்திகளின் துணையோடு மிகப்பெரும் பலத்தோடு நிலம்விழுங்க வந்த எதிரியை தமது மனவலிமையால் எதிர்கொண்டு களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களைப் பூசிக்கும் இந்நாளே தமிழரின் எழுச்சி நாளாகும்.

எத்தனையோ இன்னல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு வளர்ச்சியடைந்து வந்த எமது விடுதலைப் போராட்டம் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் கவனத்தைப் பெருமளவு ஈர்த்தது. பெருமளவான எமது தாயக நிலப்பரப்பை மீட்டு ஓர் அரசகட்டமைப்பை நிறுவி நிர்வகித்துக்கொண்டிருந்த வேளையில்தான் பன்னாட்டுச் சக்திகளின் அழைப்பையேற்று அமைதிவழியில் தீர்வுநோக்கிப் பயணிக்க பேச்சுவார்த்தைக்குச் சென்றோம்.

சிறிலங்கா அரசோடு சமதரப்பாக உலகால் கணிக்கப்பட்டே அப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எமது தாயக நிலப்பரப்புக்கு பன்னாட்டு நிறுவனங்களும் உயரதிகாரிகளும் இராஜதந்திரிகளும் வருகை தந்தனர். எமது சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களும் அரச நிர்வாக நடைமுறைகளும் பெருமளவு பாராட்டைப் பெற்றன. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதான எமது மீட்புப்பணிகளும் நிர்வாக நடைமுறைகளும் புனர்வாழ்வுக் கட்டுமானப்பணிகளும் உலக அமைப்புக்களாலும் அரசுகளாலும் பெரிதும் பாராட்டப்பட்டன. ஒருவகையில் உலக அங்கீகாரம் எமது நடைமுறை அரசுக்கு வழங்கப்பட்டே இருந்தது.

ஆனால் திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் கால இழுத்தடிப்புக்களும் வஞ்சனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு எமது போராட்டத்தையும் அமைப்பையும் பலவீனப்படுத்தும் காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அமைதிக்கான போர்நிறுத்தக் காலத்தில் எமது போராளிகள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான கொலைகள், எமது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகள் என ஏராளமான அழுத்தங்களை சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டபோதும் நாம் பொறுமையாகவே இருந்தோம்.

ஆனாலும் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்த உடன்பாட்டை மீறி முழுமையான போரை எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது சிங்களப் பேரினவாத அரசு. இந்த இக்கட்டான நேரத்திலும் நாம் தற்காப்புத் தாக்குதல்களை மட்டும் மேற்கொண்டு வந்தபோதும், போரைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு கொண்டிருந்த உலகநாடுகள் பாராமுகமாகவே இருந்தன. உரிய அழுத்தங்களைக் கொடுத்து போரை நிறுத்த அவை தவறிவிட்டன.

சிங்களப் பேரினவாத அரசின் கடந்தகால வரலாற்றைக் கொண்டு, ‘இறுதிப்போர்’ என்ற பதாகையோடு எம்மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் எவ்வாறு பேரழிவைத் தருமென்பது எவராலும் உய்த்துணரக்கூடியதாகவே இருந்திருக்கும். அவ்வகையிலே புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின் முற்றத்திலிறங்கி எமது மக்களைக் காக்க வேண்டி அர்ப்பணிப்பான போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் பல்வேறுபட்ட சக்திகளின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்பட்ட எமது மக்கள் மீதான கொடியபோர் முள்ளிவாய்க்கால் பேரழிவையே எமது மக்களுக்குத் தந்தது. உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய மானுட அழிவை எமது மக்கள் சந்தித்தனர்.

போர் முடிவடிடைந்ததாகச் சொல்லப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் எமது மக்கள் மீதான அடக்குமுறைகள் குறையவோ மாறவோ இல்லை. இலங்கைத்தீவில் தமிழினம் மீதான இனவழிப்பு மும்முரமாகத் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

வெளிப்பார்வைக்கு இயல்புநிலை திரும்பியதாக ஒரு தோற்றப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் காட்ட முனைந்தாலுங்கூட உண்மைநிலை அதற்கு மாறாகவே உள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள், வதைகள் என்பன நாளாந்தம் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன.

இதேவேளை, ஈழத்தமிழினம் ஒரு தேசியஇனம் என்ற அடிப்படையையும் எமது தாயகக் கோட்பாட்டையும் சிதைக்கும் வகையில் நாசகாரத் திட்டத்துடன் சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. மொழிச்சிதைப்பு, பண்பாட்டுச் சிதைப்பு என்பனவற்றோடு எமது மக்களின் வாழ்விடங்களைச் சிதைப்பதும், வலிந்த சிங்களக் குடியேற்றங்களை நிறுவி எமது மக்களின் வாழ்விடப் பரப்பலைச் சிதைப்பதுமாக கொடிய இனவழிப்பை பேரினவாத அரசு நிகழ்த்திக்கொண்டுள்ளது.

‘வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம்’ என்ற தமிழ்மக்களின் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், தனித் தேசத்துக்கு உரித்துடைய எமது அரசியல் உரிமையை மாகாணசபைக்குக் கீழிறக்கி அரைகுறைவழியில் ஒரு தீர்வைத் திணிப்பதுமே சிங்கள தேசத்தின் கனவாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. அந்தக் கனவை மும்முரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

இதேவேளை, உலகநாடுகள் சிலவற்றின் நிலைப்பாடு ஏறக்குறைய சிங்கள தேசத்தின் இன அழிப்புக்குத் துணைபோகக்கூடியவையாக உள்ளமை வேதனைக்குரியது. மாகாணசபையோடு திருப்திப்பட்டுக்கொள்வதும், தாயகம்-தேசியம்-சுயநிர்ணயம் என்பவற்றைப்பற்றி அலட்டிக்கொள்ளாமலிருப்பதும்தான் சில உலகநாடுகள் தமிழ்மக்களுக்கு முன்மொழியும் ஆலோசனைகளாக அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் கடந்தகால வரலாற்றையும், பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழ்மக்களை அடக்கியாண்ட விதத்தையும், தமிழினம் எதிர்கொண்ட, எதிர்கொண்டுவரும் இனவழிப்பையும் அறிந்துகொண்ட எவருமே இப்படியான அரைகுறைத் தீர்வை முன்மொழிவது நியாயத்தின் பாற்பட்டதாக இருக்க முடியாது.

எமது இனத்துக்கான சமவுரிமை, பாதுகாப்பு, தம்மைத்தாமே நிர்வகிக்கும் தன்னாட்சியுரிமை என்பவற்றுக்கான உறுதிப்பாடுகளில் எள்ளளவும் அமையப்பெறாத மாகாணசபையை ஒரு தீர்வுத்திட்டமாக எக்காலத்திலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே வரலாற்றுப்பாடமாக உள்ளது. இந்த உண்மையை விளங்கிக் கொண்டால் தமிழ்மக்களின் இறைமையையும் பாதுகாப்பையும் பகடைக்காயாக உருட்டி விளையாட நியாயமாய்ச் சிந்திக்கும் எவரும் துணிய மாட்டார்கள்.

போர் முடிந்ததாகக் கூறி நான்கரை ஆண்டுகளான பின்பும்கூட இன்னமும் எமது மக்கள் சிறிலங்காப் படையினரால் சூழப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான இராணுவச் சூழலிற்குள்ளேயே எமது மக்கள் தமது அன்றாட வாழ்வைக் கழிக்கின்றார்கள். மக்களுக்கான சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் தலையீடுகளின்றி சிவில் நிர்வாகம் இயங்கமுடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றது. வடமாகாணசபை அமைக்கப்பட்ட பின்னரும்கூட எமது மக்கள் போராட்டங்கள் சிறிலங்காவின் அடாவடிக் காவற்றுறையால் மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. பேரினவாதப் பேய் புழுத்துப்போயிருக்கும் சிறிலங்கா நீதித்துறையாலும், இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆளுநர் நிர்வாகத்தாலும் கட்டுப்படுத்தப்படக்கூடிய இந்த மாகாணசபையானது எம்மக்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பையோ, நல்வாழ்வையோ வழங்க முடியாத ஓர் தீர்வுத்திட்டமாகவே இருக்கும் நிலையில் எவ்வாறு இதை தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக ஏற்றுக்கொள்வது என்பதை அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.

எனினும் இந்த அடக்குமுறைக்குள்ளும் கொடுமைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் எமது மக்களின் தாயகவிடுதலைக்கான தாகம் இன்னும் தணியவில்லை. உலக வரலாற்றின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தபடி இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது விடுதலைத் தாகத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள். தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியும், பொருத்தமான நேரங்களில் மக்கள் போராட்டங்களைத் துணிச்சலாக முன்னெடுத்தும் அவர்கள் தமது விடுதலை வேட்கையை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள்.

வடமாகாண சபைத் தேர்தலை ஒட்டிய நிகழ்வுகளும் அதன்பின்னர் நடப்பவையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை உலக அரங்கில் புதிய கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. தேர்தல் காலத்தில் உலகின் அதிகரித்த பார்வை வடமாகாணசபைத் தேர்தலில் குவிந்திருந்ததும், அதன் பெறுபேறுகளுக்கு உலக அரசுகளும் ஊடகங்களும் கொடுத்த முக்கியத்துவமும் தமிழர் தரப்பின் அரசியற் சிக்கல் மீதான உலகின் கரிசனையை வெளிக்காட்டுகின்றது.

குறிப்பிட்ட தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த அரச எதிர்ப்புக்கு உலகம் கொடுத்த முக்கியத்துவமும் எமது விடுதலைப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியே. வடமாகாணசபையைத் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாகக் கருதி அதற்கு முக்கியத்துவமளித்துச் செயற்படும் புதிய ஓர் உலக ஒழுங்கை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இத்தேர்தலின் மூலம் கிடைத்துள்ள கவனயீர்ப்பைப் பயன்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த எத்தனிக்க வேண்டுமேயொழிய விரிக்கப்படும் வலைக்குட் சிக்குண்டு மாகாணசபையோடு முடங்கி எமது சுதந்திர வேட்கையை நீர்த்துப் போக விடக்கூடாது.

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே,

தீவிர அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் தாயகத் தமிழர்களின் செயற்பாடுகளும் போராட்ட முன்னெடுப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நாமனைவரும் அறிவோம். இந்நிலையில் உலக அரங்கில் காத்திரமாகப் போராட வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் உங்களையே சார்ந்துள்ளது. தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது விடுதலை வேட்கையை உலகெங்கும் பறைசாற்றி அதற்குரிய ஆதரவுகளைத் திரட்டும் வேலைத்திட்டமும் புலம்பெயர்ந்த எமது மக்களிடமே உள்ளது. குறிப்பாக பன்மொழி வல்லமையோடும் துடிப்போடுமுள்ள இளைய சமுதாயம் இச்செயற்பாட்டில் முன்னின்று உழைக்க வேண்டும்.

நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள அனைத்து இன மக்களிடமும் எமது போராட்டத்தின் நியாயத்தைக் கொண்டுசென்று அவர்களின் ஆதரவைத் திரட்டுவதே முதன்மையான பணியாக அமைந்துள்ளது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி முழுமூச்சாக எமது விடுதலைக்கான ஆதரவை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும்.

பல்வேறு தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் அமைப்புக்கள் எமது இறுதி இலக்கில் ஒன்றுபட்ட கருத்தோடு பணியாற்றுவதோடு, எமது மக்கள் ஒன்றுதிரண்ட சக்தியாகப் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. உலக முற்றத்தில் தமிழ்மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் வேண்டுகை எல்லாவிடங்களிலும் எல்லா வேளைகளிலும் ஒன்றாகவே இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

தாயக மக்களின் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களின் வாழ்வியல் மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. பல்வேறு வழிகளிலும் தாயகமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான செயற்பாடுகள் நடைபெற்றே வருகின்றன. அவற்றைத் தொடர்ந்தும் மேம்படுத்திச் செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

அன்பார்ந்த தமிழக உறவுகளே,

தமிழ்த் தேசியப் போராட்டம் என்ற வகையில் ஈழத்தைவிடவும் தமிழகத்தின் போராட்டம் காலத்தால் முந்தியது. மொழிக்கான, இனத்துக்கான போராட்டங்கள், தியாகங்கள் என்று நீண்ட வரலாற்றையும் தொடர்ச்சியையும் கொண்டது தமிழகம். எமது போராட்டம் முளைவிட்ட காலத்திலிருந்தே எமது தாங்கு சக்தியாகத் திகழ்ந்து வந்தது தமிழகம். அன்று மட்டுமன்றி என்றுமே எமக்குரிய பக்கபலமாகத் திகழவேண்டிய பொறுப்பு தமிழகத்துக்கே உண்டு. உள்நாட்டு அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஈழப் போராட்டத்தின்பால் நீங்கள் காட்டிவந்த, தற்போது காட்டிக்கொண்டிருக்கும் கரிசனை அளப்பரியது.

எமது தாயக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் எமது தாயக மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவல்ல கூப்பிடு தொலைவில் இருப்பவர்கள் நீங்கள்தாம். எமது மக்கள் அபயக்குரல் எழுப்புவதும் முதலில் உங்களிடம்தான். எமது மக்களின் பாதுகாப்பு பெருமளவில் உங்களையே சார்ந்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் எமது மக்களுக்கான கேடயமாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமது மக்களுக்குண்டு.

அரசியற்கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மட்டுமன்றி மாணவர் எழுச்சியும் போராட்டங்களும் எமது விடுதலைப் போராட்டத்திற்கான உந்துசக்திகள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவற்றின் விளைவுகளான தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் தொடக்கம் பல்வேறு தாக்கங்கள் ஈழவிடுதலைக்கான பாதையில் மைற்கற்களே.

இன்றைய நிலையில் தமிழகத்தைத் தாண்டி எமது ஈழப்போராட்டத்தின் நியாயத்தையும் அரசியல் வேட்கையையும் இந்தியப் பிராந்தியமெங்கும் பரப்ப வேண்டிய தேவை மிக அவசியமாகவும் அவசரமாகவும் உள்ள பணியாகும். ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களோடும் இயக்கங்களோடும் அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென்பதே எமது அவா.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளின் சிறுதுளிகளாவது உலக அரங்கில் பன்னாட்டு ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்டுக் கொணரப்பட்டுள்ளன. சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களும் இனப்படுகொலை ஆதாரங்களும் இன்றளவும் தொடர்ந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதவுரிமை அமைப்புக்களின் அறிக்கைகளும் சிறிலங்காவின் பேரினவாத அரசின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஓரளவாவது வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டுள்ளன.

அண்மையில் கொழும்பில் நடந்துமுடிந்த பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பாக முக்கிய நாடுகள் சில மேற்கொண்ட நடவடிக்கைகள் எமக்கு ஓரளவு ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகின்றன. மிகக் காட்டமான எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் முன்வைத்த கனடாவும், அதேவேளை, மாநாட்டில் கலந்துகொண்டாலுங்கூட இயன்றளவுக்கு தமது எதிர்ப்பையும் தமிழர் இனச்சிக்கல் தொடர்பான தமது கரிசனையையும் வெளிப்படுத்திய பிரித்தானியாவும் முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள்.

ஊடகங்களினதும் முக்கிய நாடுகளினதும் இக்கரிசனையால் சிறிலங்கா அரசாங்கம் பரப்பிவந்த பொய்கள் ஓரளவாவது உலகமுற்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மனச்சாட்சியுள்ள எவரையும் உலுக்கிப்போடும் உண்மைகள் படிப்படியாக வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனாலும் சிறிலங்கா அரசாங்கமோ எவரையும் பொருட்படுத்தாமல் திமிர்த்தனத்துடனேயே நடந்துகொண்டு வருகின்றது. அயல்நாடுகளினதும், ஐ.நா நிறுவனங்களினதும், மனிதவுரிமை அமைப்புக்களினதும் கருத்துக்களையோ ஆலோசனைகளையோ செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாகவே நடந்து வருகின்றது.

உண்மைகள் எப்போதும் உறங்கா. மனிதம் மரணித்துப் போகாது, மானிட விழுமியங்களை மதிக்கும் சமூகங்களின் மூலம் எம்மக்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகளை முழுமையாக உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும். இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், அமைதி காத்த நாடுகளும் எம்மக்களின் நியாயமான போராட்டத்தினை என்றோ ஒருநாள் உணர்வார்கள். அதுவரை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

சிங்கள அரசானது ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் இந்த நான்கரை ஆண்டுகளிற்கூட உருப்படியாக எந்தத்தீர்வையும் தமிழர்களை நோக்கி வைக்கவில்லை. மாறாக தமிழர்கள் மீதான இனவழிப்பை மும்முரமாமாக மேற்கொண்டே வந்திருக்கின்றது.

இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட மேலும் வலுவடைந்துள்ள இன்றைய நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

அன்பான தமிழீழ மக்களே,

எமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும், துன்பங்களையும் அழிவுகளையும், கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்குமுறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. ‘சத்தியத்தின் சாட்சியாக நின்ற மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி’ என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு, தமிழினத்தின் விடுதலை வேட்கையை தமது வீரத்தாலும் அர்ப்பணிப்பாலும் பறைசாற்றிச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூரும் இந்நாளில், தமிழீழ விடுதலையென்ற எமது உயர்ந்த இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

TAGS: