கமரூன் இலங்கையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிருப்தி தெரிவித்து மகஜர்- இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க பிரித்தானியா திட்டம்?

cameron_mahinda_001இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அரச ஆதரவு அமைப்புநேற்று மகஜர் ஒன்றை வழங்கியது.

பிரித்தானிய இலங்கையர் ஒன்றியம் என்ற அமைப்பே இந்த மகஜரை வழங்கியது.

பிரதமர் டேவிட் கமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் பிரித்தானியாவில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த மகஜரில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் யோசனை முன்வைக்க பிரித்தானியா திட்டம்?

பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பிரித்தானியா இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் பிரதமர் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து பிரித்தானியா பொருளதார தடைவிதிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது.

இதன் ஊடாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

TAGS: