எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம்!- தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் பசில் அழைப்பு

Basil-Rajapakseஎமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக் கொள்ள முடியும்.  இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமது எதிரியான பிரபாகரனை எம்மூலம் அழிக்க வேண்டும் என்ற நோக்குடனே சில சர்வதேச நாடுகள் இருந்தனவே தவிர பொது மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கரிசனைகளும் இருக்கவில்லை.

வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் வடக்கிற்கு செல்ல ஆரம்பத்தில் அச்சம் கொண்டிருந்தனர்.

இன்று கமரூன் போன்றவர்கள் கூட எவ்வித அச்சமின்றி வடக்கிற்கு சென்று வரும் நிலைமையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

அதேபோன்று சகல தரப்பினரும் அச்சமின்றி பங்கு கொள்ளும் வகையில் முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தேர்தல் வடக்கில் இம்முறையே நடந்து முடிந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடபகுதி மக்களின் நலன் கருதி பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் அபிவிருத்திக்கும் செயற்பாடுகளுக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் படை வீரர்களின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

TAGS: