கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக் கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த தடுப்பூசி போடப்பட்ட வேளையில் இந்த இளம் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா இருமாத காலம் கருத்தரித்த நிலையில் இருந்ததாகவும் அதையும் மீறி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதனால் பின்னர் அதற்கு மாற்றீடான தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தும் மிகமோசமான உடல் பாதிப்பிற்குள்ளாகி கோமா நிலைக்கு சென்ற வேளை கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இந்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 4 நாடகளாக சிகிச்சைபெற்றிருந்த அவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று சனிக்கிழமை பரிதாகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் சொந்த இடத்திற்கு எடுத்துச் செலலப்பட்டுள்ளது.