ஜனாதிபதி சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம் கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறி வருகின்ற நிலையில் இங்கு நடப்பது வேறாகவே உள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ஒத்துழைப்பதாகத் தான் கூறி வருகின்றார். ஆகவே அவ்வாறான ஒத்துழைப்புக்களை எமக்கு வழங்குவதில் ஜனாதிபதியுடன் எமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் நடைமுறையில் நாங்கள் பார்ப்பது அதற்கு முரணாகத் தான் இருக்கின்றது.
இதில் ஜனாதிபதியினை குறைகூறுவதா அல்லது அவரின் கீழ் இருக்கின்ற அலுவலர்களைக் குறை கூறுவதா என்று எமக்குத் தெரியவில்லை. இதற்கு உதாரணமாக இங்கு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலப் பகுதியில் நான் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.
அதாவது வடக்கில் நடைபெறுவது மகிந்த ராஜபக்ச சிந்தனையா அல்லது மகிந்த ஹத்துருசிங்க சிந்தனையா எனக் கேட்டேன். இந்த நிலையே மீண்டும் இங்கிருக்கின்றது. ஆதனால் அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றேன்.
குறிப்பாக இப்போது நடைபெறுவதனை அவதானித்தால் ஜனாதிபதிக்கு இங்கிருக்கும் இராணுவத்தோடு தொடர்பபட்டவர்கள் சம்பந்தமாக அல்லது இங்கிருக்கும் நடவடிக்கைகள் அல்லது ஆளுநர் சம்பந்தமாகவோ அவருக்கு எந்த விதமான அதிகாரமும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
அதாவது ஏனென்றால் அவர் எங்களுடன் மிக நன்றாக நல்லதொரு முறையிலையே கேட்பதெல்லாம் தருவதாக உறுதியளித்திருந்தார். அதேபோன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தூதுவர்களுக்கும் இதனைத் தெரிவித்து வருகின்றார்.
இதேபோன்று கடந்த வாரம் ஜனாதிபதியினை சந்தித்திருந்த நோர்வே நாட்டின் தூதுவரிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாரென்றும் அதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஆனால் இங்கு நடைபெறுவது வேறு. இதன் காரணத்தினால் நாங்கள் பரீசிலிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அல்லது இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு எடுத்தியம்ப வேண்டி இருக்கின்றது.
ஆகவே இத்தகைய விடயங்கள் மற்றும் இங்குள்ள நிலைமைகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரே! உலக பார்வை ஈழ மக்களின் மேலிருப்பதால் செய்வதை செவ்வன செய்க! இந்தியாவின் ஆதிக்கத்தை உள்வைத்து செயல் படாதீர்! இல்லையேல் மீண்டும் சூழ்ச்சியை எதிர்கொள்வீர்!!!