யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
வலி. வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இவ் நலன்புரி நிலையத்திலையே வசித்து வருகின்றனர்.
சேறும் சகதிகளுக்கு மத்தியில் வாழும் இம் மக்களின் குடிசைகளுக்கு நேரில் சென்ற சலோகா பெயானி அவ் மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
பல இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 23 வருடங்களாக முகாமில் வாழ்ந்து வரும் எம்மை இன்னும் சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் எமது காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த மாதம் வந்த சில அதிகாரிகள் எமக்கு வேறு இடத்தில் காணி தரலாம் என கூடிச்சென்று கீரிமலை வீதியில் கல் குவாரிக்கு அருகில் உள்ள காணியை காட்டி இங்குவந்து குடியேறுமாறு கூறினார்கள்.
நாம் அக்காணிகளில் குடியேற மாட்டோம் எம்மை எமது சொந்த இடத்தில் தான் குடியமர்த்த வேண்டும் என மக்கள் ஐ.நா. பிரதிநிதியிடம் கூறினார்.
உங்கள் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள். அதற்கு உங்களிடம் என்ன தீர்வு உள்ளது. பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கவே நான் இங்கு நேரில் வந்துள்ளேன்.
நீங்கள் உங்கள் சொந்த இடத்தில் மீளவும் குடியமர ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பது புரிகின்றது.இதனை நான் தெரியப்படுத்துவேன்.
இதன் மூலம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நம்புகிறேன் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.