ஐ.நா. பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்! இலங்கை அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வேண்டுகோள்!

un-s.jeganathanவடமாகாணத்தில் 2009ம் ஆண்டின் நடுப்பகுதியில் படையினரிடம் ஒப்படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களுடைய குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதியை சர்வதேசம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை பிரதி சபாநாயகர் எஸ்.ஜெகநாதன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி பிரதிநிதி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மேற்படி சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில். 2009ம் ஆண்டு 17ம், 18ம், 19ம் திகதிகளில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் தற்போது இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை சர்வதேசம் தமிழர்களுக்கு கூறவேண்டும்.

இதேபோன்று எமது மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் 1984ம் ஆண்டு தமிழர்களை வெளியேற்றிவிட்டு அப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக பேணிய அரசாங்கம், தற்போது தமிழர்களுடைய காணிகளை சிங்கள மக்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தனைக்கும் தமிழர்களுடைய காணிகளுக்கு தற்போதும் தமிழர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கின்றன.

எனவே யுத்தம் நிறைவடைந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிறப்பு பிரதிநிதி அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தாம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதேவேளை, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது உறவுகளை மீட்டுத் தருமாறு முள்ளிவாய்க்காலில் காணாமற்போனவர்களின் உறவுகள் எழுப்பிய அழுகுரல் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

TAGS: