கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச கடல்சார் அமைப்பு (I.M.O), இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும்.
அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அண்மையில் எம்.பீ. சீமன்காட் ஒஹியோ என்ற கப்பல் கைது செய்யப்பட்டது.
அதில் நான்கு இனங்களை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 25 பேர் இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளையும் தோட்டக்களையும் சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர்.
இந்த நபர்கள் வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்களிடம் இது பாதுகாக்கும் நிறுவனம் என்று கூறப்படும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இப்படியான சில நிறுவனங்கள் இந்து சமுத்திரத்தில் இயங்கி வருகின்றன.
இவர்கள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குறிக்கப்பட்ட கடமை நேரத்தில் கப்பல்களில் ஏறி இறங்குகின்றனர். அவற்றில் அரசு சாரத தனியார் பாதுகாப்பாளர்களும் உள்ளனர்.
எந்தொரு நாட்டின் துறைமுகத்திலும் இவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை. இது மும்பாய் மீது தாக்குதல் நடத்தை போன்ற தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார பிராந்தியத்தில் இப்படியான எத்தனை கப்பல்கள் இருக்கின்றன?. அவற்றில் இருக்கும் ஆயுதங்கள் என்ன?. என்பது பற்றிய சர்வதேச தரங்களுக்கு அமைவான விபரங்கள் தேவை.
இந்திய கடற்படை, கேரளா லட்சதீவுகளுக்கு அருகில் கடற்கொள்ளையர்களின் 4 படகுகளை மூழ்கடித்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து 450 கடல் மைல் தொலைவு வரை கடற்கொள்ளையர்களின் எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை. இதனால் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தேவையில்லை என்றார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக தெரிவித்து, இலங்கையின் காலிக்கு அப்பால் தொலைவில் உள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருகிறது. இதனை நடத்தி வரும் முக்கிய நபர்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்வும் ஒருவர்.
அவருக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு நிறுவனம் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி சோமரத்ன திஸாநாயக்கவும் இந்த நிறுவனத்தில் தான் சேவையாற்றி வருகிறார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வகிக்கும் அரச அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனங்களை நடத்த முடியாது என்ற போதும் பாதுகாப்புச் செயலாளர் சில தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு பிரித்தானிய நிறுவனம் ஒன்றும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரியவந்தது.