தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது: சீ.யோகேஸ்வரன்

yoheswaran_speech_09_002தமிழர்களின் போராட்டங்களிலும், தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத ரீதியாக நாம் இந்துக்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாகவிருந்தாலும் நாம் இன நீதியில் நாம் தமிழ் தாயின் பிள்ளைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின் ஐம்பதாவது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற விஷேட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலய பங்குத்தந்தை ஞா.மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை இருதயராஜ், அருட்தந்தை அன்டனிதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்!

“மறைந்த தனிநாயகம் அடிகளார் சர்வதேச ரீதியில் தமிழ் உலகம் கூறும் பெரும் அறிஞர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழரசுக் கட்சி ஊடாக ஆரம்பிக்கபபட்ட காலகட்டத்தில் அவரரும் அதில் பங்குபற்றியிருந்தார்.

1972ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே நான்காவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது அதில் முன் நின்று செயற்பட்டவர். அவரது தமிழ் பற்றையும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிக்காக உலகமெங்கும் ஈழத் தமிழர்கள் அவரது நூற்றாண்டை கொண்டாடுகிறார்கள்.

போர் ஓய்ந்தாலும் தமிழ் மக்கள் நெருக்கடியான காலகட்டத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் அன்றும் சரி இன்றும் சரி அதற்கெதிரான போராட்டங்களில் கிறிஸ்தவ மதகுருமார்களின் பங்களிப்பை நாம் மறந்து விடமுடியாது.

இதன் காரணமாகவே போர் காலத்தில் மட்டக்களப்பில் வண பிதா சந்திரா பெர்ணான்டோ உட்பட கிறிஸ்தவ மதகுருமார்கள் சிலர் தமது உயிரை துப்பாக்கி குண்டுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வண பிதா ஹேபியர் உட்பட இன்னும் சிலர் காணாமல் போயுள்ளார்கள் இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் தற்போதைய சந்ததியினர் இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

மத குருமார்களோ அல்லது மத அமைப்புகளோ சமயம் சார்ந்த பணி மட்டும் தான் தமது கடமையாகக் கருதக் கூடாது. மனித உரிமைகளுக்காக குரலெழுப்ப வேண்டும். மனித நேயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். இந்த அடிப்படையில் தான் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையூடாக எமது பணிகள் சமயம் மற்றும் அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.

TAGS: