தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேசத்தின் தலையீடுகள் அவசியம். வடக்கில் ஜனநாயகத்திற்காக அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்றினையே எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் உள்ள இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வரை அரசாங்கத்திற்கு சகல விதத்திலும் அழுத்தங்களை கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி உடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றினை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். சுமார் 3 மணித்தியாலத்திற்கு அதிகமாக இருதரப்பினரும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு வாழ் தமிழர்கள் தமது வாழ்வில் ஜனநாயகத் தினையும் சுதந்திரத்தினையும் தொலைத்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இதனை வென்றெடுக்க வேண்டிய கடப்பாட்டில் நாம் போராடி வருகின்றோம். தமிழர்களின் நிலை என்னவென்பதை கடந்த வடமாகாண சபை தேர்தல் மூலம் முழு உலகமும் அறிந்துவிட்டது. இப்போது வடக்கு மக்களும் இநாமும் எவற்றை எதிர்பார்க்கின்றோம், எதற்காக போராடுகின்றோம் என்பதையும் அனைவரும் அறிந்துவிட்டனர்.
எனவே, தமிழ் மக்களின் பாதுகாப்பினையும் அவர்களுக்கான ஜனநாயகத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சர்வதேசத்தின் தலையீடுகள் கட்டாயமாக தேவைப்படுகின்றன. சர்வதேசத் தலையீட்டால் மாத்திரமே வடக்கிற்கு நிரந்தரமானதொரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்பதே எமது முக்கிய கோரிக்கை. நாம் பலதடவைகள் இது தொடர்பாக அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அரசாங்கம் செவிமடுக்காது தான் தோன்றித் தனமாகவே செயற்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் இன்னமும் தமிழர்களை அடக்கி யுத்த பயத்தினை தமிழர்கள் மனதில் நீங்காது வைத்திருக்கும் செயற்பாட்டிலேயே வடமாகாண ஆளுநரும் அரசாங்கமும் செயற்படுகின்றன என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
ஆகவே, இனிமேலாவது எமது தமிழ் மக்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளித்து அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்க வேண்டும். நாம் தீவிரவாத செயற்பாடுகளிலேயோ அல்லது மீண்டுமொரு யுத்தத்தினை எதிர்பார்த்தோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை. நாம் எப்போதும் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினையே எதிர்பார்க்கின்றோம்.
எனவே, இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியுடனான இந்த நீண்டநேர சந்திப்பில் சிறுபான்மை மக்களின் நிலைபற்றியும் வடக்கின் இன்றைய தேவைபற்றியும் பல விடயங்களை கலந்துரையாடி உள்ளோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என்பதை அவரிடம் தெரிவித்துள்ளோம்.
ஆகவே, எமது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான நல்லதொரு தீர்வினை பெற்றுக் கொடுத்து வடமாகாணத்தை இராணுவ தலையீடுகள் இன்றி மாகாண சபைகள் ஊடாக இயங்கவைக்க வேண்டிய அனைத்து அதிகார த்தையும் அரசு தலையீடுகளின்றி வழங்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.