இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முக்கியமான ரகசிய திட்டம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட திட்டம் என்பதுடன் இது பற்றி முப்படைத் தளபதிகளுக்கோ, அரசாங்கத்தின் உயர் மட்ட அரசியல்வாதிகளுக்கோ தெரியாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்புச் செயலாளரின் முழுமையான மற்றும் நேரடியான கண்காணிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத் தரப்பில் இருக்கும் நம்பிக்கையான இரண்டு பேரின் உதவியை மட்டும் கோத்தபாய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.
கோத்தபாயவின் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தற்பொழுது உயிருடன் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட உள்ளது.
2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட புலிகளின் இரண்டு முக்கிய இராணுவத் தளபதிகளின் பதுமனும் ஒருவர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட புலிகளின் மற்றைய முக்கிய தளபதி அந்த அமைப்பின் அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக கருணா என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஏற்பட்ட உள்முரண்பாடுகள் காரணமாக பிரபாகரனின் உத்தரவின் பேரில் பதுமன் சிறையில் அடைக்கப்பட்டதுடன் கருணா அந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் புலிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பதுமன் இறுதிக்கட்டப் போருக்கு பின்னர், அங்கிருந்து தப்பி அரச படையினரிடம் சரணடைந்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதுமனை அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க வைப்பதற்கான பொறுப்பு கோத்தபாய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இரக்கும் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோத்தபாயவின் உத்தரவின் படி இந்த வருடத்தின் நடு பகுதியில் பதுமன் விளக்கமறியலில் இருக்கும் போது கருணா சந்தித்துள்ளார்.
இதன் போது கருணாவிடம் பேசிய பதுமன் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் தான் கட்டாயம் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பதுமனை அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க வைக்க முடியவில்லை என கருணா, கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து முழுத் திட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்ட கோத்தபாய, முக்கியமான தனியான இடம் ஒன்றில் பதுமனை சந்தித்துள்ளார்.
இதன் பிரதிபலனாக பதுமன் கடந்த செப்டம்பர் மாதம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் விடுதலை செய்யப்பட்டார். பதுமனுக்கு எதிராக வழக்கை முன்னெடுத்துச் செல்ல போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால் அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட பதுமன் தற்பொழுது திருகோணமலை பிரதேசத்தில் வசித்து வருகிறார். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவர் சமூகத்திற்கு காட்டி வருகிறார்.
தினமும் இரண்டு முறை ஆலயத்தில் வழிப்பாடுகளில் கலந்து கொள்ளும் பதுமன் தான் சமய ரீதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு காண்பித்து வருகிறார். எனினும் உண்மை அதுவல்ல.
பதுமன் தனது கட்டுப்பாட்டில் இயங்கிய 40 விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுக்கு பானாகொட இராணுவ முகாமுக்கு அருகில் விசேட இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அவர்களின் செயற்பாடுகளை கவனிக்கவும் சரளமாக தமிழ் பேசக் கூடிய இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் காட்டுக்குள் சென்று அங்கிருந்து ஆயுத ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதே இந்த குழுவின் அடிப்படை நோக்கமாகும். இதற்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்திக் கொடுப்பார்.
கொழும்புக்கு வரும் பதுமன் தங்கியிருப்பதற்காக முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இருக்கும் பிரதேசத்தில் சகல வசதிகளுடன் கூடிய வீடு ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட தேவையான பின்னணிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் பஸ்களிலும் வாகனங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயுதங்கள் மீட்கப்படும். இந்த சம்பவங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் சகல ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அணுசரனையில் ஆரம்பிக்கப்படும் புலிகளின் முதல் திட்டம் முன்னணி தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்வதாகும்.
இந்த அரசியல் தலைவர்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதன், சுமந்திரன் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் சகல வழிகளையும் அடியோடு அழிப்தே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த புதிய புலிகள் அமைப்புக்கு வழங்கியிருக்கும் இலக்காகும்.
பாதுகாப்புச் செயலாளரின் இந்த ரகசியமான திட்டம் பற்றிய பல முக்கிய தகவல்கள் தம் வசம் இருப்பதாக தெரிவித்துள்ள இந்த தகவல்களை வெளியிட்டுள்ள ஆங்கில இணையத்தளமான லங்கா வெப் நியூஸ், முழு தகவல்களையும் வெளியிட இது சந்தர்ப்பம் அல்ல என கூறியுள்ளது.
இந்த தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே தமக்கு கிடைத்திருந்தாலும் அமைதியாக இருந்து தகவல்களை சேரித்து வந்ததாகவும் எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக இந்த தகவல்கள் வெட்ட வெளிச்சமாக்கப்படும் எனவும் லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.