வடகிழக்கில் இராணுவம் வெளியேற்றப்பட்டு முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்

SAMஇன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்கள், காணாமல் போன குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், பிள்ளைகள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் 2013 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின பிரகடனத்தை பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர் முன் வைத்தார். (பிரகடனத்தின் முழு விவரம் பின்னிணைப்பு செய்யப்பட்டுள்ளது.)

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் மனித உரிமைகள் தின பிரகடனங்கள்

மனித உரிமை என்பது கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடர்கிறது. ஆம் ஒரு மனித உயிர் கருவாய் உருக்கொள்ளும் கணத்திலேயே மனித உரிமை பிறந்து விடுகிறது. ஏனெனில் முறையற்ற கருக்கலைப்பு முழுமையாய் பெரும் குற்றம். மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை.

மனித உரிமை என்ற சொல்இ 1766-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் தான் முதன் முதலாக பயன்பட்டதாக அறியப்பட்டுள்ளது. பண்டையக் காலத்தில் மனித உரிமை என்பது தர்மசிந்தனையாகவும், பாவ புண்ணிய மதிப்பீடாகவும் இருந்து வந்திருக்கிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள்இ மனிதப்படுகொலைகள்இ அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும். 1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக்குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி “சர்வதேச மனித உரிமைகள் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. “சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது.

எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்களை மேற்கோள் காட்டி இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்ட சமுகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மாவட்டத்தின் எல்லை தன்டி அனைத்து சமூகங்களினதும் மனித கௌரவத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதை இலட்சியமாக கொண்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள், ஆபத்துகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது.

ஆகவே சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்று இலங்கைத்தீவில் மனித உரிமை பேணப்பட்டு மனித கௌரவம் பாதுகாக்கப்பட்டு வடகிழக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் மனித உரிமைகள் தின நிகழ்வை நாம் ஒழுங்குபடுத்தியிருப்பதோடு முக்கிய பிரகடனங்களையும் முன் வைக்கின்றோம்.

01 வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு முழு அளவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியின் பின்னரான அரசியல் சூழலில் வடகிழக்கு பிராந்தியமானது ஒரு முழு இராணுவ வலயமாகவே காட்சியளிக்கின்றது. ஒவ்வொரு குடிமகனும் தன்னை அறியாமலேயே தான் இராணுவத்தினுடைய பார்வைக்குள் முடக்கப்பட்ட பிரமையுடனேயே வாழ்க்கையை கழிக்கின்றான். இந்நிலை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

சர்வதேச அழுத்தங்களின் விளைவாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வியலுக்கு அடித்தளமிட வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இலங்கையில் ஏனைய மாகாணங்களை விட, மிதமிஞ்சிய இராணுவ எண்ணிக்கையையும், அதற்கான கட்டுமான பணிகளும் வடகிழக்கு மாகாணத்தில் பிரஜையும் அச்சம் கொள்ள வைக்கின்றது. இந்தச்செயற்பாடுகளை அரசு தடுத்து நிறுத்தி சிவில் நிர்வாகத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

02 காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பொறுப்புக்கூற வேண்டும்.

உழைத்து தமது குடும்பத்தின் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய வயதில் பல இளைஞர் யுவதிகளும், குடும்ப தலைவர்களும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை நம்பி தங்கி வாழும் நிலையிலிருந்த பல குடும்பங்கள் இன்றும் கூட மீள முடியாத வறுமை நிலையில் கண்ணீரோடு படுத்து கண்ணீரோடு எழும்பும் நிலைமையே காணாமல் போன குடும்பங்களின் தொடர் கதையாகி விட்டது.

காணாமல் போனோர் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறா தன்மை நீண்டு கொண்டு செல்வதைப் போலவே நாளுக்கு நாள் காணாமல் போனோர் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. சிறீலங்கா அரசானது காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்து, காணாமல் போனோரை கண்டுபிடித்து உறவினர்களுடன் இணைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மறுவாழ்வு பெறுவதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வலியுறுத்துவதோடு, காணமால் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் அஹிம்சைப் போராட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கக்கூடாது.

பிரித்தானிய பிரதமர் டேவிற் கமரோன் யாழ்ப்பாணம் சென்றபோது நடத்தப்பட்ட போராட்டங்கள் மிக மோசமாக அடக்கப்பட்டதையும் கொழும்பை நோக்கிய அவர்களின் பயணத்துக்கும் அரசாங்கம் தடை விதித்தமையும் மனித உரிமை மிறலாகும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது.

03 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் மூன்று தசாப்த காலங்களுக்குப்பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி பல தமிழர்கள் பயங்கரவாத, அவசரகால தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய சூழ்நிலையைக்காரணம் காட்டி அரசாங்கம் இந்த கைதிகளின் விடயத்தில் பாராமுகமாக இருந்து வந்தது. இன்றும் அதே போக்கு தொடர்கின்றது. தாங்கள் என்ன குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கூட இதுவரை காலமும் அறியாது சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு மேலதிகமான சிறைத்தண்டனையை கைதிகள் அனுபவித்து விட்டார்கள். தமது குடும்பங்களைப் பிரிந்து பல வருடங்களை சிறைகளுக்குள்ளேயே கழித்துவிட்டார்கள். அரசாங்கம் இவர்கள் விடயத்தில் இனியும் பாராமுகமாக இருக்காது விரைந்து செயற்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் 4 ஆண்டுகள் கழிந்த பின்னரும் சிறையில் அடைத்து வைத்திருப்பதானது சர்வதேச மனிதாபிமான சட்டதிட்டங்களுக்குப் புறம்பானதொரு செயற்பாடாகும். அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

04 திட்டமிட்ட நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும்.

மனித குலத்தின் வாழும் உரிமையை உறுதி செய்வதே நிலம் தான். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ மயமாக்கல், தொழில் மயமாக்கல், பௌத்த விகாரைகளை அமைத்தல், தேசிய உடமையாக்கல் என்று பலவித நோக்கங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தத்தமது பூர்வீக நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

நிலஅபகரிப்பு ஒரு வித மனிதபாதுகாப்புப் பிரச்சனையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுகளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை பல குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் நீண்டகால தனிமனித விருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது அல்லது மறுக்கிறது. இதுவும் புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகலாம். எனவே தமிழ் பேசும் மக்களது வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

05 இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய புதிய குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் முஸ்லிம் சிங்கள மூவினங்களுக்கிடையில் கசப்புணர்வையும், அச்ச-உணர்வையும் ஏற்படுத்தக்கூடிய சிறுபான்மை சமுகங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய உட்கிடையான அரசியல் நோக்கம் கொண்ட அனைத்து புதிய குடியேற்றங்களும், அக் குடியேற்றங்களுக்காக இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான காடழிப்புகளும் உடன் நிறுத்தப்பட வேண்டுமென வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அரசை வலியுறுத்துகின்றோம்.

குக்குடியேற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ முஸ்லிம் சமுகத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு பிரஜைகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.

06 வடக்கு கிழக்கில் தமிழ்ச் சமூகத்தின் இன சமநிலையை சீர் குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழ் பேசும் சமுகத்தை வடகிழக்கிலிருந்து நீர்த்து போகச் செய்யும் நோக்கோடு வடகிழக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் மனித நாகரிகமற்ற அனைத்து செயற் பொறி முறைகளையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது. குறிபாக தமிழ் பேசும் சமூகத்தின் நிலங்களை பிரித்து முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றகள் ஒரு இன அழிப்பாகும்.

07 மக்களின் வழிபாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்து ஆலயங்களும், பள்ளி வாசல்களும் தகர்க்கப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் ஒவ்வொரு இலங்கைகு பிரஜையையும் விரக்தியின் உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ஆகவே வழிபாட்டு ஸ்தலங்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலிறுத்துகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனங்களில் 18 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ள சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச்சுதந்திரம் ஆகியவற்றுககு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

08 விடுதலை பெற்ற முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு புதிய கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

தொடர்ந்தும் சந்தேகம் என்ற வட்டத்துக்குள் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சக்கரத்தை இயங்க விடாது தான் சார்ந்தோ தனது சமுகம் சார்ந்தோ சமுக பற்றுறுதியுடன் அரசியல் அல்லது அரசியலுக்கு அப்பால் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அவர்கள் சுதந்திரமாக உரிமையுடன் வாழ்வதற்காக மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசு தடை விதிப்பதை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிப்பதோடு புதிய கைதுகளையும் தடுக்க கோருகின்றது.

யுத்தத்துக்கு முன்னர் யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம். யாரை வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி கைது செய்யலாம் எனும் நிலையிருந்தது. இந்த அபாயகரமான சூழலே இலங்கைத்தீவில் பல இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையை சூனியமாக்கியிருக்கிறது. இனியும் இத்தகைய ஏதேச்சதிகார போக்குகள் தொடர இடமளித்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனளிக்க கூடிய இன்னும் பல ஆயிரம் இளைஞர் யுவதிகளின் அளவிட முடியாத எதிர்கால கனவுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.

ஐ.நாவின் மனித உரிமை பிரகடனங்களின் 9 ஆவது உறுப்புரை ஒரு தலைப்பட்ச மனப்போக்கான வகையில் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடு கடத்தல் ஆகியவற்குக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது என்று தெளிவாக வலியுறுத்துகின்றது. எனவே விடுதலை பெற்ற இளைஞர் யுவதிகளையோ அன்றி சாதாரண இளைஞர் யுவதிகளையோ காரணம் இன்றி எழுந்தாமானமாக கைது செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

09 மக்கள் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

இறந்தவர்களை இறைவனுக்கு ஒப்பாகவே உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் மதிக்கும் அதேவேளை இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களை புனித பிரதேசங்களாக சர்வதேச நியமங்களும் பிரகடனம் செய்துள்ளன மனித குலம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரையான அதன் வரலாற்று பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம் தான் மனித சமுகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. மனித இருப்புக்கே ஆதாரம் பலம் தான் என்று புகட்டியவர்கள் போர் வீரர்களே. தனக்கு எதிர் திசையில் நின்று போர் புரிந்தவன் இறந்த பின்பு அவர்களின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்று போர்க்கலை வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.

இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப்போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப்போரியல் நுணுக்கங்களும், அதன் தந்திரோபாயங்களும் எனும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்துகின்றானோ அவனே சிறந்த வீரன் என்று கூறியுள்ளார். இத்தகைய நீண்ட வரலாற்று பின்னணியில் சமர்க்களமாடி மடிந்தவர்களை இலட்சிய புருசர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் வழிபடும் முறை உலக மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

தமிழர்களின் வாழ்வியலில் இறந்தவர்களை கடவுளாக போற்றி வழிபடும் மரபு தொன்று தொட்டு இருந்து வருகின்ற பண்டைய தமிழர்கள் சங்க இலக்கியங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் நடுகல் வைத்து படையல் இட்டு போரில் இறந்த வீரர்களை நினைவு கூர்ந்து வந்தனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் தமது உரிமைக்காக உயிர் நீத்தவர்களை போற்றி வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இப்பூமி பந்தில் தமது அடக்குமுறைகளுக்கு எதிராக உரிமை வேண்டி போராடிய ஒவ்வொரு இனத்தையும் அடக்கி ஆளும் தரப்பு பயங்கரவாதியாகவும், உரிமைக்காக ஏங்குகின்ற மக்கள் குழு அவர்களை தியாகிகளாகவும் பார்ப்பது வழமையாகும். ஒரு மனிதன் ஒரு தரப்பின் பார்வைக்கு தியாகியாகவும், இன்னுமொரு தரப்பின் பார்வைக்கு பயங்கரவாதியாகவும் தெரிவதை இன்றைய உலக ஒழுங்கில் இறந்தவர்களை நினைவு கூற மறுக்கும் தன்மையை இலங்கை தேசத்தின் அரசியல் முதிர்ச்சியின்மையாகவே உலகம் கணித்துள்ளது.

உலகெல்லாம் தமது நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை தேசிய வீரர்கள் தினமாக பிரகடனப்படுத்தி அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழ் மக்கள் மட்டும் போரில் இறந்த தம் உறவுகளை கௌரவித்து நினைவு கூற விடாமல் தடுப்பது மனித நாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் வழிபாட்டு உரிமை சட்டங்களை மீறும் மிகப்பெரிய மனித உரிமை மீறல் செயலுமாகும்.

10 யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் சொல்லணா துன்பங்களை அநுபவித்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அங்கவீனர்களாகி உடல்களில் குண்டுகளை தாங்கி நிற்கும் குடும்பங்களுக்கே இந்திய வீட்டுத்திட்டத்திலோ அல்லது ஏனைய வீட்டுத்திட்டங்களிலோ முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவின்போது புள்ளியிடும் திட்டம் கவனத்தில் கொள்ளப்படுவதாகவும், இந்த புள்ளியிடும் திட்டத்தில் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை மிகப் பிரதானமானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் பலர், குடும்ப அங்கத்தவர்களை கொத்துக்கொத்தாக இழந்து தனித்துப்போய் கையறுநிலையில் இருக்கிறார்கள். யுத்தம் தந்த கைம்பெண்கள் ஏராளம். அபலைப்பெண்கள் ஏராளம். யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள், இந்த புள்ளியிடும் நடவடிக்கையால் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு, தறப்பாள் கொட்டகைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

குடும்ப அங்கத்தவர்களை இழந்து தனிமரமாக வீதியில் நிற்பவர்களிடம் அங்கத்தவர்களை காட்டு வீடு தருகிறோம் என்றால், அவர்கள் கொல்லப்பட்ட தமது அங்கத்தவர்களுக்கு உயிர் கொடுத்து கூட்டிவரவா முடியும்? எனவே தனிநபர், இருவர், இரண்டுக்கு மேற்பட்டோர் எனும் அங்கத்தவர் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உள்ளிட்ட வீட்டுத்திட்ட உதவி வழங்கும் நாடுகள் பரிந்துரை செய்ய வேண்டும். அதிலும் இறுதி யுத்தத்தை சந்தித்தவர்களுக்கு அவசியம் வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

அங்கத்தவர் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டுதான் வீட்டுத்திட்டம் வழங்கப்படுமென்றால், முள்ளிவாய்க்காலில் பேரவலத்தைச்சந்தித்த பெரும்பாலான தமிழ் மக்களுக்கு வீடே கிடைக்காமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது என்பதை இந்த நாடுகள் உணர வேண்டும்.

11 மனித உரிமைக்காகவும், மனித கௌரவத்துக்காகவும் குரல் கொடுப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அடக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமுக ஆர்வலர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் அரசாங்கம் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். அண்மை காலங்களில் வடகிழக்கின் உண்மை நிலையை ஆராய வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் உண்மை நிலையை எடுத்துக்கூறும் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் தொலைபேசி மிரட்டல்களும், கொலை அச்சுறுத்தல் கடிதங்களும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுக்கவனம் செலுத்தி இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் வேண்டும்.

12 ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு சுயாதீனமாக இயங்கவும் வழி கோலப்பட வேண்டும்.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் தொடருகின்றன. குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கொலை செய்யப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். கடத்தப்படுகின்றனர். தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை எழுத முற்படும்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகத்துறை ஜனநாயகம் சுதந்திரம் அற்ற நிலையில்தான் செயற்படுகின்றது. கொலை செய்யப்பட்ட காணமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. சந்தேகநபர்கள் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யப்படாத நிலையும் உண்டு. ஆகவே ஊடக சுதந்திரம் ஊடக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்த நாளில் வவுனியா மாவட்ட பிஜைகள் குழு வலியுறுத்துகின்றது.

SAM_0504

SAM_0511

TAGS: