இலங்கையின் வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் விதத்தில் மத்திய அரசு செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.
குறிப்பாக, வடக்கு மாகாண ஆளுநர் அரசியலமைப்பை மீறும் விதத்தில் செயற்படுவதால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்டமுறையான தீர்மானமொன்றை நிறைவேற்ற மாகாணசபையால் முடியும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளை புதிதாக உருவாக்கப்போவதாக அறிவித்திருந்ததன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலமைப்பை மீறியிருப்பதாக ஆளுநர் சந்திரசிறி கூறியிருப்பதை சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அப்படி ஆளுநர் சந்திரசிறி கூறியிருப்பதே அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
‘நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் பலன்’
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலர் பதவி முதலைமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான- தமக்குப் பொருத்தமான ஒருவரை பிரதம செயலாளராக முதலமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள நிலையிலும், பல வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த நியமனம் சாத்தியப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
வடக்கு மாகாணத்துக்கான புதிய காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளபோதும், அதுபற்றி வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடப்படவில்லை என்றும் சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படியும் மாகாணசபை சட்டத்தின்படியும் மாகாணசபை நிர்வாகத்தின் அதிகாரப் பட்டியலின் கீழுள்ள பல விடயங்களை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
போரின் முடிவில் அமைந்த இலங்கையின் முதலாவது வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை பொறுப்பேற்கும்போது, தென்னிலங்கைக்கும் அரசாங்கத்திற்கும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதியின் முன்னால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், அரச தரப்பிலிருந்து அவ்வாறான சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட வில்லை என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் சுமந்திரன் கூறினார். -BBC