தமிழர்களை சூறையாடுவதே அரசாங்கத்தின் நோக்கம்: சீ.வி. விக்னேஸ்வரன்

vigneswaran_speach_001புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று அரச தரப்புக் கூற தொடங்கியுள்ளதாகவும், ஏதோ ஒரு காரணத்தை கூறி தமிழ் மக்களை சூறையாட வேண்டும் என்பதை அவர்களின் நோக்கம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்முடன் இருக்கும் சிலரை இல்லாமல் செய்தால் என்ன என்று தான் பலாத்காரத்தில் ஊறிப்போன சிலர் நினைப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் இது பற்றிப் போதிய புரிந்துணர்வு இருந்து வருகின்றது என்பதை இவர்கள் மறக்கக் கூடாது.

இந்தப் புரிந்துணர்வின் காரணமாகத்தான் வெளிநாட்டு அரசாங்கங்கள் எமது யுத்தகால அனர்த்தங்கள் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றார்கள்.

வடமாகாண சபை இப்பொழுது கிடைத்துள்ளதென்றாலும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்காது எம்மை இறுக்கமாகத் துவண்டு வீழ்ந்து கிடக்கக் காணவே அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆசைப்படுகின்றார்கள் போல்த் தெரிகிறது.

தாம் கட்டிய ஏ9 போன்ற தெருக்களுக்கும், அரச கட்டடங்களுக்குந் தமிழ்மக்கள் மதிப்பளிக்கவில்லையே என்ற கோபம் போலும். இராணுவம் முன்னிறுத்திய வேட்பாளர்களை மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற ஆத்திரமாகவும் இருக்கக் கூடும்.

இந்த இராணுவம் மற்றும் அரசாங்கக் கோபங்களும், ஆத்திரங்களும் தமிழ் மக்களின் மனதை மாற்றிவிடாது என்பதே எனது எதிர்பார்ப்பு. இராணுவம் இங்கு நிலைத்து நிற்பதால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நாங்கள். இங்கு அவர்கள் இருப்பதால் முற்றிலும் நன்மையைப் பெற்று வருவது இராணுவமே. அவர்களால் எங்கள் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது.

வன்னியில் அரச காணிகளை இராணுவம் கையேற்று நெற்செய்கை, மரக்கறிச் செய்கை, பழச் செய்கை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பது மாத்திரமன்றி தனியார் காணிகளையுந் தமக்கு மாற்றித்தருமாறு பலாத்காரம் செய்து கொண்டு வருகின்றார்கள்.

மீன்பிடித்துறையைப் பார்த்தோமானால் காலாதிகாலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த எமது மீனவர்களை போரின் போது தடுத்து நிறுத்தினர் போர் வீரர்கள். இன்று போர் முடிந்து “போகலாம் கடலுக்கு” என்று கடற்கரை சென்றால் இன்றும் அப்படித்தான்! தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள்.

தனித்தியங்கத் தடை விதிக்கின்றார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் தொலைவில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பிற இன மீனவர்களின் நலனை முன்னிட்டுத்தான். ஏனென்றால் எமது வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு தெற்குக்குச் செல்கின்றன.

தற்போது தெற்கில் பணம் சம்பாதித்து வடக்குக்குத் தமிழர்கள் அனுப்பிய காலம் போய் வடக்கில் வாரி எடுத்துத் தெற்குக்கு அனுப்பும் காலம் இப்பொழுது உதயமாகியுள்ளது. இவை யாவும் என் வாழ்நாளிலேயே நடந்தேறக் காண்கின்றேன் என்பது எனது துரதிர்ஷ்டமே!

இம்முறை எங்கள் வரவு செலவு சம்பந்தமான வடமாகாண சபைக் கூட்டத்தில் இராணுவ உள்ளீட்டால் எம் மக்கள் படும்பாடு பலராலும் சித்தரித்துக் காட்;டப்பட்டது. இராணுவ பிரசன்னம் எமது வாழ்வாதாரங்களைக் கொள்ளையடிப்பது.

மட்டுமல்ல எமது நிலங்களைக் கையேற்கின்றன, கடல்களை சூறையாடுகின்றன, பெண்களின் கற்பை விலை பேசுகின்றன என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இன்று எம்முன் இருக்கும் பாரிய கடப்பாடு இராணுவத்தினரை வெளி அனுப்புவதே. இன்று இந்தக் கூட்டத்தில் கூட இராணுவப் பிரசன்னம் இருக்கின்றது என்பது என் கணிப்பு.

எந்தத் தருணத்திலும் இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட மாட்டாது என்று அரசாங்கம் சார்பில் கூறப்பட்டிருக்கின்றது. அப்படியானால் அதன் அர்த்தம் என்ன? ஏதாவது காரணங் காட்டித் தொடர்ந்து வடக்கைச் சூறையாட வேண்டும் என்பதே அவர்கள் நோக்குப் போல்த் தெரிகின்றது.

இன்னமும் மக்கள் புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். எந்நேரமும் விழிப்பாக நாம் இருக்க வேண்டும். இல்லையேல் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று இப்பொழுது சொல்லத் தலைப்பட்டுள்ளார்கள்.

அதற்கு அத்தாட்சி காட்ட முன்னைய புலி இராணுவத் தலைவர்களில் ஒருவரைக் கொண்டு இராணுவ அலகொன்றைத் தற்பொழுது அரசாங்கம் வழிநடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களிடையே ஜனநாயகத்தையும், அதனூடு விடுதலை எண்ணங்களையும் பரப்பிக் கொண்டிருக்கும் திரு சம்பந்தன் போன்றவர்களையும், என்னைப் போன்றவர்களையும் அழிக்க அவர்கள் கையமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று வந்த செய்திகள் கூறுகின்றன.

இன்று எந்தளவுக்குச் சுயநலம் உக்கிர நிலை அடைந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இவர்கள் எல்லோரதுஞ் சுயநலம் தமிழ்ப் பேசும் மக்களின் பொது நலத்தைக் குறிபார்த்து வைக்கப்பட்டுள்ளன.

எவ்வளவு காலத்திற்குத்தான் பொய்மையின் அடிப்படையில் போர்வீரர்களை இங்கு நிலைத்து வைக்க எண்ணுகின்றார்களோ தெரியாது.

ஆனால் இராணுவம் தொடர்ந்து வடக்கில் நிலை கொண்டிருந்தால் வடகிழக்கு மாகாணங்கள், தமிழ்ப்பேசும் மக்களின் தாயகம், எமது தமிழ்த்தேசிய இனம் வாழும் பிரதேசங்கள் இவை, இங்கிருப்பவர்களுக்குச் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும் வேண்டும் என்றெல்லாம் நாம் மேடையேறிப் பேசுவதில் அர்த்தம் இல்லாமல்ப் போய்விடும். உலகம் என்றார்.

TAGS: