இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் அஹமட் பா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கொன்றில் அமெரிக்காவின் ஹூவர் அமைப்பின் பிரதிநிதியான துங்கு வரதராஜன் இந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் இணக்கப்பாடுகளில் கையெழுத்திடவில்லை என்பதால், நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாது என அஹமட் பா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இனப்படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ஹெடாட சீன், அஹமட் பா வின் கருத்தை ஆமோதித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க குறித்த ரோம் உடன்பாட்டில் கைச்சாத்திடுவதை நிராகரித்தார். எனினும் 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததாக ஞாயிறு திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதேவேளை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் உறுப்பினர்களான ருத்ரகுமாரன், அடேல் பாலசிங்கம், நெடியவன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு வெளிநாட்டில் இருந்த வந்த இலங்கையர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரியதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்து விட்டதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
தெற்காசியவில் உள்ள எந்த நாடும் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்றும் திவயின கூறியுள்ளது.
மயிலே மயிலேன்ன இறகு போடாது?