மனித உரிமை மீறல் விவகாரம்! புலிகளுக்கு எதிரான போர் குறித்து இராணுவம் 8 ஆவணப்படங்கள்

channel-04ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு இராணுவம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் போர் குறித்து 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் விவகாரத்தினால் உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு ஆளாகிவரும், இலங்கை இப்பிரச்சினையை சமாளிக்க இராஜதந்திரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. குற்றம் சாட்டியது.

கொழும்பு வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டார். இது குறித்த அறிக்கையை மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவர் சமர்ப்பிக்கிறார்.

இதில் இலங்கைக்கு எதிராக மேலும் சில தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே கொமன்வெல்த் மாநாட்டிற்கு வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையில் நடந்துள்ள போர்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க ராஜபக்சவிற்கு கெடு விதித்தார். இல்லையேல் இலங்கைக்கு எதிராக பன்னாட்டு சபையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.

உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு ஆளாகிவரும், இலங்கை இப்பிரச்சினையை சமாளிக்க இராஜதந்திரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வணிகசூரிய கூறியதாவது:-

இராணுவம் தாயரித்துள்ள 8 வீடியோ ஆவணப்படங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கும், ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ ஆதாரங்கள் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும். இதில் விடுதலைப் புலிகள் செய்துள்ள அநேக குற்றங்கள் பற்றி உலகம் தெரிந்துகொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் வெற்றிபெற்றன. இந்நிலையில் மூன்றாவது தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: