இராணுவ ஆளுநராலேயே வடமாகாண சபையில் குழப்பம்! சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்! விஜித ஹேரத்

wijitha_herath_03வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையில் அரசமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இராணுவ ஆளுநர் நியமனமே அடித்தளமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ஆளுநர் பதவிக்கு இராணுவத் துறையைச் சார்ந்த அதிகாரிகளை நியமிப்பது தவறான செயலாகும்.

எனவே, வடக்கு ஆளுநரை நீக்கிவிட்டு அப்பதவிக்கு நிர்வாகம் தொடர்பில் சிறந்த அனுபவமுள்ள சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியது.

ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண சபைக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநருக்குமிடையில் தற்போது அரசமைப்பு ரீதியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், வடக்கு ஆளுநர் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் பின்வருமாறு தெரிவித்தார்

ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்தின் போது இராணுவ அதிகாரிகளையோ அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையோ அத்துறைக்கு நியமிப்பது தவறாகும்.

அந்தப் பதவிகளுக்கு சிவில் நிர்வாகச் செயற்பாடுகளில் புலமையுள்ள சிவில் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும்.

எனவே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பிரச்சினைகள் முற்றுவதற்கு முன்னர் இராணுவ அதிகாரிகளை நீக்கிவிட்டு சிவில் அதிகாரிகளை ஆளுநர்களாக நியமிக்கவேண்டும் என்றார்.

TAGS: