கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒருசதி நடவடிக்கை போலவே புலப்படுகிறது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
அரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ அல்லது பேசுவதையோ தவிர்த்து தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்வது சாலச்சிறந்தது.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகமானது, கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக தரம் உயர்வதனால் ஏன் இந்த அடிப்படையில் இனமுரண்பாடுகள் வரவேண்டும் என்பதனை இவ்வாறான அறிக்கைவிடுபவர்கள் தெளிவாக திறந்த மனதுடன் தெரியப் படுத்தல் வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் இன்று நிம்மதியாக சந்தோசமாக சகோதரத்துவத்துடன் இங்கு வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் எந்த விதமான விரிசல்களுமில்லை. திறந்த மனதுடன்தான் வாழ்கின்றனர்.
இந்நிலையில் கல்முனையைப் பிரித்தால் முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல்வாதிகளின் செய்திகளைப் பார்த்து அதிர்ந்து போனோம். காரணம் இவர்கள் யாரை எச்சரிக்கின்றார்கள்? ஏன் எதற்காக எச்சரிக்கை விடவேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
உண்மையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கை என்ன வென்றால் ஏற்கனவே உப தமிழ் பிரதேச செயலகமாக நீண்டகாலமாக தனித்தியங்கும் கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரச சேவையினை விரிவு படுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே தனித்தமிழ் பிரதேச செயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைக்க வேண்டும் என்ற ஒரேஒரு நோக்கத்திற்காக மட்டுமே ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்திட்டத்தினை எதிர்ப்பது போன்று ஒரு நடவடிக்கையினை ஏற்படுத்தி அதனூடாக அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்றனர்.
எனவே தயவு செய்து தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரிக்கும் சதியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதனை எந்தச் சமுகமும் இனிமேல் ஏற்றுக் கொள்ளாது. அதேபோன்று எந்தச் சதியிலும் எமது இரு இனமக்களும் சிக்கமாட்டார்கள் என்பதனையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் மிகநன்று.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கரையோர மாவட்டம் கேட்கின்றனர். எந்த தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்கருத்தும் வெளியிட்டார்களா, இல்லையே. அதே போன்று மட்டக்களப்பு மத்தி என்று இனி முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்தி அமையப் பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி கல்விவலயம் இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று எந்த தமிழ் அரசியல் வாதிகளோ அமைப்புக்களோ எதிர்க் கருத்துககளைக் கூறி தடுக்க நினைத்தார்களா? இல்லையே. ஏன் நீங்கள் தமிழ் பிரதேச செயலகம் ஒன்று உருவாவதை தடைசெய்ய எத்தணிக்கின்றீர்கள்? இதனால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் தீமைதான் என்ன?
எனவே தயவு செய்து இப்படியான இனவிரோதக் கருத்துக்களைக்கூறும் அரசியல் தலைவர்களே தயவு செய்து தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட்டு மக்களிற்கு நல்லவை நடக்க தங்களின் ஆதரவை வழங்குங்கள் அதுதான் நல்ல அரசியல் வாதிகளின் பண்பாடாகும். என அந்த அறிக்கையில் சுட்டிக்கட்டப் பட்டுள்ளது.
இரு இனங்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும்: அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கம்
சாக்குப் போக்குச் சொல்லியும், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் ஒன்றுக்கொன்று முரணான விளக்கங்களை முன்வைத்தும் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தரமுயர்த்தப்படுவதை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதுதான் எதிர்காலத்தில் இரு சமூகங்களிடையேயும் பாரிய முரண்பாடுகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தைச் சகல அதிகாரங்களும் கொண்டதாகத் தரமுயர்த்தும் முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்த எதிர்ப்புக் காரணமாக ஒத்தி வைக்கப்படிருக்கின்றது வீரகேசரி செய்தியை ஒட்டிப் பின்வரும் விளக்கங்களை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் சார்பில் மக்கள் முன் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பழைய நிருவாக அலகான பிரிவுக் காரியாதிகாரி பிரிவு முறை நீக்கப்பட்டுப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் நிருவாக அலகுகளாக அறிமுகம் செய்யபட்ட போது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஆக்கப்பட்டது.
முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கியிருந்த கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவினைக் (தற்போது பிரதேச செயலகப்பிரிவு) கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு தென் பகுதியானது 100வீதம் முஸ்லீமைக் கொண்டதாகவும் வட பகுதியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் இரண்டு தனித்தனி நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்பதே 1988 இலிருந்து கல்முனைத் தமிழர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையாகும்.
இக்கோரிக்கையின் நியாயத்தையும் யதார்த்தபூர்வமான தன்மையையும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சு உணர்;ந்து கொண்ட காரணத்தினால்தான் 12.04.1989 அன்று கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கென தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு மேலதிக உதவி அரசாங்க அதிபராகத் தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. ஆனால் இப்பிரிவு, எல்லைகள் வகுக்கப்பட்டதாகவோ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவோ முழுமையான அதிகாரங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டதாகவோ அல்லாமல் பெயரளவிலேயே இதுவரை இயங்கி வந்தது.
1993ம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானத்தின் ஒரு தொடர் நடவடிக்கையாகவே இப்போது இப்பிரிவானது தரமுயர்த்தப்படவும் வர்த்தமானிப் பிரகடனம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பது அக்கட்சியின் தமிழர் விரோதப் போக்கையே எடுத்துக் காட்டுகின்றது. நெஞ்சிலே தமிழர் விரோத நஞ்சை வைத்துக்கொண்டு உதட்டளவில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசும் முஸ்லிம் காங்கிரஸின் சுயரூபம் இப்போது வெளிப்பட்டுள்ளது.
மேலும் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் யாவும் நிலத் தொடர்பற்றுக் காணப்படுவதால் இதனைப் பிரிக்க முற்படும் போது இரு சமூகங்களிடையேயும் பாரிய முரண்பாடுகளும், விரிசல்களும் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் விபரித்துக் கூறினர் என்றும் மேற்படி பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு 100வீத முஸ்லிம்களைக் கொண்டதாகவோ அல்லது ஒரு தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு 100வீத தமிழர்களைக் கொண்டதாகவோ இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வட்டிவெளி, குண்டுமடு, இன்ஸ்பெக்ரர் ஏத்தம், தாமரைக் குளம், ஊறணி, கனகர் கிராமம், றொட்டை, கோமாரி, சங்கமன்கண்டி போன்ற தமிழ்க் கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. அதே போன்று முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வீரமுனை, கோரக்கர், வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, கணபதிபுரம் போன்ற தமிழ்க் கிராமங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாணிக்கமடு என்ற தமிழ்க் கிராமமும், அட்டாளைச்சேனை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி என்ற தமிழ்க் கிராமமும், நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் என்ற தமிழ் கிராமமும் உள்ளன.
இதேபோன்று காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இவை போன்றதுதான் உத்தேச கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத், போன்ற இடங்களில் வதியும் முஸ்லிம்கள் அடங்குவது.
எனவே இங்கே நிலத் தொடர்பு அற்றுக் காணப்படுவது என்ற வாதமோ – இரு சமூகங்களிடையேயும் பாரிய முரண்பாடுகள் எழும் எனும் வாதமோ ஆதாரமற்றவை மட்டுமல்லாமல் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடிக்கும் முதலைக் கண்ணீருமாகும்.
உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை உளமார விரும்புவதாயின், உத்தேச கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தெற்கே கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியை எல்லையாகக் கொண்டு வடக்கே பெரிய நீலாவணைக் கிராமம் வரை அதாவது வடக்கு எல்லை மட்டக்களப்பு மாவட்டமாகவும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும், மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லையாகக் கொண்டு அமைவதற்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இத்தகைய ஒத்துழைப்பு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்குமே தவிர ஊறு விளைவிக்க மாட்டாது என்பதைச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து சாக்குப் போக்குச் சொல்லியும், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் ஒன்றுக்கொன்று முரணான விளக்கங்களை முன்வைத்தும் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தரமுயர்த்தப்படுவதை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதுதான் எதிர்காலத்தில் இரு சமூகங்களிடையேயும் பாரிய முரண்பாடுகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இங்கு இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அது என்னவெனில், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முன்னைய சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவு துண்டாடப்பட்டுத்தான் புதிய இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைச் செயலகப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முன்னைய கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு துண்டாடப்பட்டுத்தான் புதிதாக முஸ்லிம் பெரும்பான்மைச் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஏற்படுத்தப்பட்டது. நிர்வாகத் தேவைகளுக்காக இவ்வொழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோன்றதொரு பாரபட்சமற்ற நிர்வாகத் தேவைதான் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் உருவாக்கமும் அதன் தற்போதைய தரமுயர்த்தலுமே தவிர அதனை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகப் பார்ப்பது தவறான கண்ணோட்டமாகும். மட்டுமல்ல இது தமிழர் விரோத மனப்போக்குமாகும். எனவே முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை பற்றி உதட்டளவில் பேசுவதை விடுத்து உளமாரச் செயலில் காட்ட முன்வர வேண்டும்.
யாழ்பானத்தில் எப்போது முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்வதாக உத்தேசம், தமிழ் அரசியல் வாதிகள் யாருமே அதை பத்தி வாயை திறப்பது இல்லை. தமிழ் ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களை தமிழ் முஸ்லிம்கள் தங்களுடன் இஸ்லாமிய நாடுகளில் வாழ்கிறவர்களை சகோதரர்கலத்தான் பார்கிறார்கள். ஆனால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறிர்கள் என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்? சகோதரர்களே.