இராவணன் இலங்கை மன்னன் அல்ல! இராமாயணத்தில் குறிப்பிடப்படுவது இலங்கையல்ல!- எல்லாவல மேதானந்த தேரர்

ellawala_medhananda_001இலங்கை இந்து நாடு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இனவாதத்தை தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழ் இந்து நாடு என முதலில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே கூறினார். இதில் எந்த வரலாற்று ரீதியான சாட்சியங்களும் இல்லை. அத்துடன் அது யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

நான் எழுதிய பௌத்த உறுமய நூலில் அதற்கான பதிலை வழங்கியுள்ளேன். இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இலங்கையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவற்றில் இலங்கை எனக் குறிப்பிடப்படுவது இலங்கையல்ல. வேறு ஒரு தீவு பற்றியே அவற்றில் கூறப்பட்டுள்ளது.

இதனை தவறான புரிந்து கொண்டவர்கள் இப்படியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இராவணன் என்ற மன்னன் இலங்கையில் இருக்கவில்லை. இராவணன் என்ற மன்னர் இருந்தார் என்பதை உறுதிப்படுத்த எந்த வரலாற்று ரீதியான சான்றுகளும் கிடைக்கவில்லை. இதனால் இந்த கதை புராணக் கதை.

ஆரியர்கள் இந்தியாவில் இருந்து வந்தனர். அவர்கள் வடமேற்கு இந்தியாவில் இருந்து வந்தனரே அன்றி தென்னிந்தியாவில் இருந்து வரவில்லை.

இந்தியாவின் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது போல் வேறு பிரதேசங்களில் இருந்தே தமிழர்கள் தென்னிந்தியாவுக்கு வந்துள்ளனர்.

சேரர்கள்,சோழர்கள், பாண்டியர்கள், இலங்கையை ஆக்கிரமித்தனர் என்று வரலாற்றில் கூறப்பட்ட போதும் அந்த சகல சந்தர்ப்பங்களிலும் அவரை தோற்கடித்து இலங்கையை ஐக்கியப்படுத்த இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் நடவடிக்கை எடுத்தனர். பயங்கரவாத ஆக்கிரமிப்பை அவர்கள் விரட்டியடித்தனர்.

இலங்கைக்கு வந்த ஆரியர்களும், பிராமணர்களும் இலங்கையில் வழிபாடுகளில் ஈடுபட்ட போதும் அவர்கள் வழிப்பட்ட இடங்களை இந்து ஆலயங்கள் என்று கூறமுடியாது.

விஜயன், பாண்டுகாபாயன், தேவநம்பியதீசன் ஆகியோர் இந்து மதத்தை பின்பற்றினர் என்பதற்கான சான்றுகள் எங்கும் கிடைத்ததில்லை என்றார்.

TAGS: